ஜூலை 2 – நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள முஸ்லீம் மதம் மாற்று சட்டம் தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையே கடும் பிளவையும், கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய நிர்வாக சட்டத்தின் பிரிவு 107 (பி) திருத்தப்படுவதன் மூலம் பெற்றோர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீமே இருந்தாலும் அவரின் வயது குறைந்த பிள்ளைகளை முஸ்லீம் மதத்திற்கு மதமாற்றம் செய்ய முடியும் என முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கெடா மாநில கெராக்கான் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் தான் கெங் லியாங், இந்த சட்டம் நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதனை எதிர்த்து நீதிமன்ற வழக்கு தொடுப்போம் என்று கூறியுள்ளார்.
காரணம், நாட்டின் அரசியல் அமைப்பு விதிகளுக்கு முரணாக இந்த சட்டம் அமைந்திருக்கின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.
ம.சீ.ச.வும் எதிர்ப்பு
ம.சீ.ச.வும் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. அதன் மத்திய செயலவை உறுப்பினர் லோ செங் கோக் இது பற்றி கூறுகையில், ம.சீ.சவின் தற்போதைய 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேசிய முன்னணியைச் சாராமல் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே, ம.இ.கா வின் பொருளாளர் ஜஸ்பால் சிங்கும் தங்களின் கட்சியை கலந்தாலோசிக்காமல் இந்த சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அறிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையில் இந்த சர்ச்சைக்குரிய சட்டத் திருத்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ம.இ.காவின் தேசியத் தலைவர் ஜி.பழனிவேல் நேற்று அறிவித்துள்ளார்.
இந்த சட்டதிருத்தம் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டவிதிகளுக்கு முரணானது என வழக்கறிஞர் மன்றமும் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றது.
முஸ்லீம் அல்லாத மதங்களின் ஒருங்கிணைப்பு மன்றமும் இந்த சட்ட திருத்தத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த சட்டதிருத்தம் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய முன்னணியின் ஒற்றுமையைப் பாதிக்கும் அளவுக்கு அதன் உறுப்பியக் கட்சிகளிடையே இந்த சட்டதிருத்தம் பிளவுகளையும் கருத்து வேறுபாடுகளையும் தோற்றுவித்துள்ளது.