கொழும்பு, ஜூலை 3- இலங்கை அதிபர் தேர்தலை முன்னதாக நடத்த அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை அதிபராக 2010-ம் ஆண்டில் ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், 2016-ம் ஆண்டு வரை அவர் பதவி வகிக்க முடியும்.
எனினும் அதிபர் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாகக் குறைக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்து, இரு ஆண்டுகளுக்கு முன்னதாக 2014-ம் ஆண்டிலேயே மீண்டும் அதிபர் தேர்தல் நடத்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ஆர்.யோகராஜன் கூறியுள்ளார்.
2016-ம் ஆண்டில் மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு இருக்காது என்பதைத் தெரிந்து கொண்டுள்ள ராஜபக்ச, அடுத்த ஆண்டிலேயே தேர்தலை நடத்தி தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை ஒழிக்க ராஜபக்ச முடிவு செய்துள்ளார். அதையடுத்து தேர்தலை நடத்தி வெற்றி பெற்று இந்தியாவுக்கு பிற உலக நாடுகளுக்கும் தனது பலத்தை காட்ட விரும்புகிறார்.
2014-ம் ஆண்டில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்துக்கு முன்பு இலங்கையில் தனது அதிகாரத்தை மேலும் நிலைநிறுத்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
மாவட்டங்களுக்கு அதிகாரப் பகிர்வு என்று கூறி வடக்கு, கிழக்கில் தமிழர்கள் இடையே பிளவை ஏற்படுத்தவும் அவர் முயற்சிக்கிறார் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.