Home வணிகம்/தொழில் நுட்பம் இணையத் தொலைக்காட்சி “கினிடிவி”க்கு மாபெரும் வரவேற்பு – மே மாதம் மட்டும் 7.2 மில்லியன் பார்வையாளர்கள்!

இணையத் தொலைக்காட்சி “கினிடிவி”க்கு மாபெரும் வரவேற்பு – மே மாதம் மட்டும் 7.2 மில்லியன் பார்வையாளர்கள்!

791
0
SHARE
Ad

kini tv

#TamilSchoolmychoice

ஜூலை 3 இணையம் மற்றும் தொலைத் தொடர்புகளின் நவீனத் தொழில் நுட்பத்தால் தகவல் ஊடக உலகில் பிரமிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தொலைக்காட்சிகளின் வழி செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் தற்போது இணையத்தின் வழி தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இணைய செய்தி வலைத் தளங்களும் செய்தி வடிவில் வழங்கி வந்த தகவல்களை தற்போது காணொளி (வீடியோ) வடிவில் மக்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளார்கள்.

அந்த வகையில் மலேசியாவின் பிரபல இணைய செய்தித் தளமான மலேசியாகினி, நான்கு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கிய கினிடிவி என்ற இணையத் தொலைக்காட்சியை பொதுத் தேர்தல் நடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 7.2 மில்லியன் வாசகர்கள் பார்த்துள்ளனர்.

மலேசிய தகவல் ஊடக வரலாற்றில் இது ஒரு சாதனையாகும்.

மில்லியன் கணக்கில் பார்க்கப்படும் செய்திகள்

முதலில் மலேசியாகினி டிவி என்ற பெயரில் இயங்கி வந்த இந்த இணையத் தொலைக்காட்சி சேவை பின்னர் “கினிடிவி” என்ற பெயரில் பெயர் மாற்றம் கண்டு, அதன் உள்ளடக்கங்களும் மாற்றம் கண்டன. இதனால் பிரமிக்கத்தக்க வரவேற்பும் மக்களிடம் இருந்து கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மே மாதம் 31ஆம் தேதி முடிய கினிடிவி 1.3 மில்லியன் வருகையாளர்களைப் பதிவு செய்திருப்பதோடு, 4.5 மில்லியனுக்கும் மேற்பட்ட தடவைகள் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 19.3 மில்லியன் காணொளிகள் கினி டிவி மூலம் பார்க்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இணையத் தொலைக்காட்சிகளில் முன்னணி இடத்தை கினி டிவி பிடித்துள்ளது.

கினிடிவி நிறுவனத்தின் இயக்குநர் பிரமேஷ் சந்திரன் மலேசியாகினி செய்தித் தளத்திடம் தெரிவித்த ஒரு செய்தியில், தங்களின் ஆரம்ப கால இலக்கு மாதம் ஒன்றுக்கு 2 மில்லியன் பார்வையாளர்கள்தான் ஆனால் இத்தகைய அபரிதமான வளர்ச்சியும் ஆதரவும் தங்களுக்கு ஆச்சரியத்தையும் ஊக்கத்தையும் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதே வேளையில் யூடியூப் எனப்படும் பிரபல காணொளி வலைத் தளத்தின் நேரடி வர்த்தக பங்காளியாக விளங்கும் கினிடிவி அலைவரிசை இதுவரை 131,443 சந்தாதாரர்களை ஈர்த்துள்ளது. கினி டிவி இதுவரை 7,817 காணொளிகளை பதிவேற்றம் செய்துள்ளதோடு, இதுவரை 75 மில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது.

வரவேற்புக்குக் காரணம் என்ன?

கினி டிவியின் இந்த அபரிதமாக வரவேற்புக்குக் காரணம் பொதுத் தேர்தல் குறித்த அவர்களின் நேரடி வர்ணனைகளோடு கூடிய செய்தி சேவைகளும் – குறிப்பாக எதிர்க் கட்சிகளின் தரப்பு வாதத்தை முன்னெடுத்துக் கூறியதும்தான்.

அதோடு பொதுத் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணிகள் பற்றிய விரிவான செய்திகளாலும் அதிகமானோர் கினி டிவியைப் பார்க்கத் தொடங்கினர். இந்த காலகட்டங்களில் இது தொடர்பான ஒவ்வொரு காணொளியையும் சுமார் 3 இலட்சம் முதல் 5 இலட்சம் தடவைகள் மக்கள் பார்த்துள்ளனர்.

மேலும், லாகாட் டத்து ஊடுருவல் தொடர்பான செய்திகளை சபாவிலுள்ள மலேசியா கினி பத்திரிக்கை நிருபர்களைக் கொண்டு உடனுக்குடன் தொலைபேசி வழி கினி டிவி வழங்கிய தகவல்களும் மக்களை  அதிக அளவில் ஈர்த்தன. இந்த செய்திகளை ஏறத்தாழ 2 இலட்சம் தடவைகள் மக்கள் பார்த்துள்ளனர்.

இதுபோன்ற துணிச்சலான, மாறுபட்ட அணுகுமுறைகளால்தான் கினி டிவி இவ்வளவு சீக்கிரத்தில் இந்த அளவுக்கு பிரபலமடைந்துள்ளது.

கூடிய விரைவில் கினி டிவி மலாய் மொழி அலைவரிசையைத் தொடங்கப் போவதாகவும், மேலும், சுற்றுலா, விளையாட்டு, வர்த்தகம் போன்ற துறைகளில் தகவல்களைத் தரும் அலைவரிசைகளை உள்ளடக்கிய தகவல் மையமாக அதனை உருமாற்றம் செய்யப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.