கோலாலம்பூர், ஜூலை 4 – கூட்டரசு அரசியலமைப்பில் திருத்தம் செய்தால் மட்டுமே, குழந்தைகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றம் செய்வது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று ஜசெக தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறியுள்ளார்.
அரசியலமைப்பு பிரிவு 12(4)ன் படி, குழந்தைகளை மதம் மாற்றம் செய்ய பெற்றோர் இருவரின் ஒப்புதல் வேண்டும். அதோடு அவர்கள் உயிரோடு உள்ளவர்களாக இருக்க வேண்டும் அவ்வாறு சட்டதிருத்தம் கொண்டுவந்தால் தான் இவ்விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கும்.
அவ்வாறு திருத்தம் செய்வதாக இருந்தால் ஜசெக வின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும், அரசியலமைப்பின் திருத்தம் செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும். எனவே தேசிய முன்னணிக்கு ஜசெக ஆதரவு தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத்தின் 107 வது பிரிவு சட்டதிருத்தம் 2013 முன்மொழியப்பட்டது.
இந்த சட்டத்திருத்தத்திற்கு தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளான மசீச, மஇகா, கெராக்கான் மற்றும் அரசு சாரா இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.