பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11 – காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை கட்சியின் இடைக்கால செயலாளரும், ஹிண்ட்ராப் தலைவர்களுள் ஒருவருமான பி.உதயகுமாரின் உடல்நிலை குறித்து, அவரது மனைவி இந்திரா தேவி மிகவும் கவலை அடைவதாகக் கூறியுள்ளார்.
காரணம், சிறையில் கடந்த சில நாட்களாக, உதயகுமார் கடுமையான முதுகு தண்டு வலியால் அவதியுற்று வருவதாகவும், ஆனால் சிறை நிர்வாகம் அவருக்கு வெறும் வலி நிவாரணிகளை மட்டும் வழங்கி வருவதாகவும் இந்திரா கூறியுள்ளார்.
“ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன், என் கணவர் வலியைப் போக்க சுவற்றில் சாய்ந்து நிற்கிறார். அவரை சோதித்த மூன்று மருத்துவர்கள் உட்காருவதற்கு ஒரு நாற்காலி வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தும், சிறை அதிகாரிகள் அதை கண்டு கொள்ளவில்லை. அளவுக்கு அதிகமான வலி நிவாரணிகளை உட்கொள்வதால் என் கணவருக்கு சிறுநீரக பாதிப்பு வந்து விடுமோ என்று அஞ்சுகிறேன்” என்று இந்திரா கூறியுள்ளார்.
மேலும், தனது கணவரை உடனடியாக செராஸ் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி, அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட உதயகுமாருக்கு, கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி, 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதல் காஜாங் சிறையில் உதயகுமார் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.