கோல பெசுட், ஜூலை 15 – கோல பெசுட் இடைத்தேர்தலில் பாஸ் கட்சி வேட்பாளரான அஸ்லான் யூசோப், தான் வியாபாரத்தில் மும்முரமாக இருப்பதால், தனது தொகுதிப் பணிகளைப் பார்வையிட ஒரு உதவியாளரை வைத்துக் கொள்வதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
அஸ்லானின் இந்த நேர்காணலை ‘ஹராகா’ இணையதளம் வெளியிட, அதை தேசிய முன்னணி தற்போது தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தேசிய முன்னணி தங்கள் தேர்தல் பிரச்சாரங்களில், “பாஸ் வேட்பாளர் மக்களோடு இணைந்து செயல்பட வேண்டும். அதை விடுத்து, தனது பொறுப்புகள் அனைத்தையும் ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு நழுவக்கூடாது” என்று கூறி வருகிறது.
அதே நேரத்தில், தேசிய முன்னணி தங்கள் வேட்பாளரை “ இளம் வேட்பாளர், நிபுணத்துவம் வாய்ந்தவர்” என்று பிரச்சாரம் செய்கிறது.
எனினும், இரு அரசியல் அணிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் அதிக அளவு மக்கள் கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.