கோலாலம்பூர், ஜூலை 15- வயிற்று புண்களை உருளைக் கிழங்கு சாறு எளிதாக ஆற்றுவதை மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உருளைக் கிழங்கு சாறில் அதிக அளவில் உள்ள நோய் எதிர்ப்பு மூலக்கூறுகளால் வயிற்று புண் ஆறுவது சாத்தியமாகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூலக்கூறுகள் வயிற்றில் புண்களுக்கு காரணமான பாக்டீரியாவை அழிப்பதுடன் நெஞ்செரிச்சலை போக்கவும் காரணமாகிறது. இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.
ஆய்வுக்காக பல்வேறு வகையான உருளைக் கிழங்குகள் சேகரிக்கப்பட்டு அதிலிருந்து சாறு எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இதில் மாரிஸ் பைப்பர் மற்றும் கிங் எட்வர்ட் வகை கிழங்குகள் எதிர்பார்த்த வெற்றியை அளித்துள்ளது. இந்த வகை கிழங்கில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றில் உள்ள ஒரு வகை பிரத்யேக மூலக்கூறுக்கு உரிமம்(பேடன்ட்) பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் உள்ள ப்ரோபயாடிக் யோகர்ட் உள்ளிட்ட இணை உணவுகளை போன்று இந்த சாற்றில் இருந்தும் இணை உணவு தயாரிக்கும் எண்ணம் உள்ளது.
இதுகுறித்து நடைபெறும் தொடர் ஆய்வில் மேலும் பல அரிய தகவல்கள் தெரிய வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.