கோலாலம்பூர், ஜூலை 15 – வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்ட ஆல்வின் டான் (வயது 25) மற்றும் விவியான் லீ (வயது 24) ஆகிய இருவரும் இன்று காலை மலேசிய தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய அலுவலகத்திற்கு ( Malaysia Communications and Multimedia Commission) விசாரணைக்காக வந்தனர்.
‘ஆல்விவி’ என்ற பெயரில் உள்ள தங்களது வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய படங்களை பதிவேற்றம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இந்த ஜோடி, கடந்த வியாழக்கிழமை, “பக்குத்தேவுடன் நோன்பு திறக்க வாருங்கள். நல்ல வாசனையுடன் ஹலால் முத்திரை கொண்ட சுவையான உணவு” என்று கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, நேற்று பன்றி இறைச்சியுடன் ‘ஹலால்’ முத்திரை வைத்த படங்களைத் தங்கள் முகநூலில் பதிவேற்றம் செய்து மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் நாட்டிலுள்ள இஸ்லாம் சமயத்தினர் அவர்களது படங்களைக் கண்டும் அதிர்ச்சி அடைந்ததோடு, கடும் கோபத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், அவர்கள் இருவரையும் தங்கள் செயல் குறித்து விளக்கமளிக்க வருமாறு மலேசிய தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் ஆணையிட்டது.
இன்று காலை 10.45 மணியளவில் எம்.சி.எம்.சி அலுவலகத்தில் ஆஜரான அவர்கள் இருவரும் , விசாரணை முடிந்து வெளியே வருகையில் செய்தியாளர்களை சந்திக்க மறுத்தனர்.
ஆனால், தங்கள் செயல் குறித்து மன்னிப்பு கேட்கும் படியான ஒரு காணொளியை, அவர்கள் நேற்று யூ டியூப் (Youtube) வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களான அவர்கள் இருவரும், ஏற்கனவே தங்களது பாலியல் தொடர்பான படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.