Home அரசியல் எய்தவர்கள் முன்வாருங்கள்! அம்புகளுக்கு பதில் சொல்லத் தேவையில்லை! இருந்தாலும் சில விளக்கங்கள்! – டத்தோ ஹென்ரி...

எய்தவர்கள் முன்வாருங்கள்! அம்புகளுக்கு பதில் சொல்லத் தேவையில்லை! இருந்தாலும் சில விளக்கங்கள்! – டத்தோ ஹென்ரி பதிலறிக்கை

518
0
SHARE
Ad

DATO' HENRY BENEDICTகோலாலம்பூர், ஜூலை 16 – “நான் விடுத்த அறிக்கைக்கு பதில் அறிக்கை கொடுத்திருக்கும் அல்போன்ஸ் என்ற கிளைத் தலைவர் யார் என்று எனக்கும் தெரியாது, ஊருக்கும் தெரியாது. எனவே, வெறும் அம்பான அவரை எய்தவர்கள், அவருக்கு எழுதிக் கொடுத்தவர்கள் துணிந்து தங்களின் முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு முன்வந்தால் பதில் கொடுக்க நான் தயார். இவருக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாரில்லை” என பினாங்கு மாநில ம.இ.காவின் பொருளாளரும், பாகான் தொகுதியின் தலைவருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் இன்று பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட தனது அறிக்கையில் கூறியிருக்கின்றார்.

இருப்பினும் இன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்த அல்போன்ஸ் என்ற கிளைத் தலைவரின் அறிக்கையில் கண்டுள்ள சில பொய்களுக்கும், தவறான தகவல்களுக்கும் டத்தோ ஹென்ரி விளக்கங்கள் தந்துள்ளார்.

ஹென்ரியின் விளக்கங்கள் பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

விளக்கம் # 1

நான் பழனிவேலுவுக்கு 2006, 2009 கட்சித் தேர்தல்களில் ஆதரவு தந்தேன்

‘டவுட்டு’ என்ற வார்த்தைக்கு தமிழ் மொழிபெயர்ப்பு தெரியாமல் தடுமாறியிருக்கும் அல்போன்சுக்கு எழுதிக் கொடுத்தவர்கள், என்னுடைய அறிக்கையை படிக்காமலேயே எழுதியிருக்கின்றார்கள் என்பது ‘டவுட்டு’ இல்லாமல் தெரிகின்றது.

காரணம், என்னுடைய தொகுதியை 2006 முதல் 2010 வரை சாமிவேலு சர்வாதிகாரமாக மூடி வைத்திருந்தார் என நான் தெளிவாக எனது அறிக்கையில் தெரிவித்திருந்தேன். ஆனால், 2006, 2009 தேர்தல்களில் பழனிவேலுவைக் கொண்டுவர நான் ஜால்ரா போட்டேன் என்று அல்போன்ஸ் கூறியிருக்கின்றார். 2006, 2009 கட்சித் தேர்தல்களின் போது கிளைத் தலைவராகவும், பேராளராகவும் இல்லாத நான் எப்படி ஜால்ரா போட்டிருக்க முடியும்? பிரச்சாரம் செய்திருக்க முடியும்?

உங்களுக்கு தெரியாத இன்னொன்றையும் கூறுகின்றேன். எந்த டத்தோ சரவணனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு கோதாவில் குதித்திருக்கின்றீகளோ அதே சரவணன்தான் 2006ஆம் ஆண்டிலும், 2009ஆம் ஆண்டிலும் முன்னின்று, சாமிவேலுவுடன் கைகோர்த்துக் கொண்டு இதே டத்தோஸ்ரீ பழனிவேலுவை துணைத் தலைவராகக் கொண்டு வர ஜால்ரா போட்டார், டான்ஸ்ரீ சுப்ராவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார் என்பது தான் அந்த உண்மை.

இன்று அவரேதான், பழனிவேலு சரியில்லை என்றும் பிரச்சாரம் செய்கின்றார்.

எனவே, மாறியது உங்களுக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தானே தவிர நானல்ல!

விளக்கம் # 2

நான் மத்திய செயலவை உறுப்பினர் இல்லை என்பதால் சாமிவேலு செயல்பட்ட விதம் எனக்கு தெரியாது

நான் மத்திய செயலவை உறுப்பினராக இருந்ததில்லை என்பதால் சாமிவேலு எப்படி கூட்டத்தை நடத்தினார் என்பது எனக்கு தெரியாது என உங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கின்றார்கள்.

சரி அல்போன்ஸ் அவர்களே! சாமிவேலு ஜனநாயக முறைப்படி கூட்டம் நடத்தினார் என்று சொல்வதற்கு நீங்கள் எத்தனை ஆண்டுகள் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினராக இருந்தீர்கள்! சொல்ல முடியுமா?

உள்ளங்கையில் உள்ள நெல்லிக்காய்க்கு விளம்பரம் தேவையில்லை. சாமிவேலுவின் சர்வாதிகாரத்திற்கும் விளம்பரம் தேவையில்லை.

மத்திய செயலவையில்  11 பேரை நியமிக்கும் அதிகாரம் தேசியத் தலைவருக்கு உண்டு. இப்படி 11 பேரை நியமனம் செய்துவிட்டு, கட்சித் தேர்தலில் தனது அணி என்ற பெயரில் 23 மத்திய செயலவை உறுப்பினர்களையும், 3 உதவித் தலைவர்களையும் முன் நிறுத்தி, இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று பேராளர்களை அதட்டி, மிரட்டி, வெற்றிபெறச் செய்து, உருவாக்கப்பட்ட மத்திய செயலவையைத்தான் சாமிவேலு நடத்தி வந்தார்.

அதனால்தான் எங்களின் தொகுதி நான்காண்டுகளாக மூடப்பட்டிருந்தபோது, நான் எத்தனையோ மத்திய செயலவை உறுப்பினர்களை அணுகி எங்களின் விவகாரத்தைப் பற்றி பேசுங்கள் என்று கேட்டபோது யாருமே துணிந்து முன்வரவில்லை.

மூடப்பட்ட எங்களின் பாகான் தொகுதி குறித்து பத்திரிக்கைகளிலும் பலமுறை அறிக்கை விட்டேன். எந்த மத்திய செயலவை உறுப்பினரும் அதனைக் கண்டு கொள்ளவில்லை.

எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்துத்தான் சாமிவேலுவை சர்வாதிகாரி என்று கூறுகின்றோம் என்பதை அல்போன்சுக்கு எழுதிக் கொடுத்தவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

விளக்கம் # 3

முருகேஸ்வரி, தேவந்திரனுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை

நாங்கள் கூறுவது என்னவென்றால், கட்சியில் துணைத் தலைவராக பேராளர்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு, துணையமைச்சராக,  9 ஆண்டுகள் இருந்த பின்னர் 1990ஆம் ஆண்டில் டான்ஸ்ரீ சுப்ராவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காத சாமிவேலுவின் சர்வாதிகாரத்தனத்தைப் பற்றி!

9 ஆண்டுகள் கட்சியின் உதவித் தலைவராக ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்று,  துணையமைச்சராகவும் இருந்த பொருளாதார மேதை, அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழக முதுநிலை (மாஸ்டர்ஸ்) பட்டதாரி டத்தோ பத்மாவுக்கு மீண்டும் தொகுதி வழங்காத சாமிவேலுவின் சர்வாதிகாரத்தனத்தைப் பற்றி!

பின்னர், 2004ஆம் ஆண்டில் 23 ஆண்டுகால தேசியத் துணைத் தலைவராக இருந்த சுப்ராவுக்கு, மீண்டும் நாடாளுமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத சாமிவேலுவின் சர்வாதிகாரத்தைப் பற்றி!

ஆனால், உங்களுக்கு எழுதிக் கொடுத்தவர்கள் ஒப்பிட்டிருப்பது தேசியத் தலைவரின் நியமனத்தில் பகாங் மாநில தலைவராக இருந்த – இரண்டு தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த – கடந்த 2008 பொதுத் தேர்தலில் வெறும் 145 வாக்குகளில் வெற்றி பெற்ற டத்தோ தேவேந்திரனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காததைப் பற்றி!

ஜோகூரில் புறக்கணிக்கப்பட்ட முருகேஸ்வரியோ, மகளிர் பகுதி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவரே தவிர, தேசிய நிலையில் உதவித் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ  தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. அவருக்கு பதிலாகத்தான் மகளிர் பகுதி சார்பாக டாக்டர் தனலெட்சுமி போர்ட்டிக்சன் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்டார்.

எனவே, உங்களுக்கு எழுதிக் கொடுத்தவர்களுக்கு சொல்லுங்கள் உவமைகளும், ஒப்பீடுகளும் பொருத்தமாக இல்லை என்று!

விளக்கம் # 4

நான் டாக்டர் சுப்ரமணியத்திற்கு ஆதரவாக அறிக்கை விட்டேன்

அன்று, ஒரு தொகுதித் தலைவன் என்ற முறையில் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுவின் சில குறைகளை சுட்டிக் காட்டி அறிக்கை விட்டேன் என்பதும் உண்மைதான்!

டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்திற்கு ஆதரவாக அறிக்கைவிட்டேன் என்பதும் உண்மைதான்! சாமிவேலுவை எதிர்த்தும் அறிக்கை விட்டிருக்கின்றேன்.

இதில் மூடி மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

எந்த காலத்திலும் யாருக்கும் அஞ்சியோ – அச்சுறுத்தல்களுக்கு பயந்தோ அரசியல் நடத்தியவன் நான் இல்லை.

யார் தேசியத் தலைவராக இருந்தாலும், அவர்களின் குறைகளை, கண்ணியமான முறையில் சுட்டிக் காட்டவேண்டியதுதான் ஒரு தொகுதி தலைவனின் கடமை. அதைத்தான் நானும் செய்தேன்.

இப்போது, தனது அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு, இந்திய சமுதாயத்திற்கும், கட்சிக்கும் கடுமையாக உழைத்து, 13வது பொதுத் தேர்தலிலும் கட்சிக்கு கணிசமான வெற்றியை பழனிவேலு கொண்டு வந்திருக்கின்றார் என்பதால்தான் இப்போது பழனிவேலுவுக்கு ஆதரவாக நிற்கின்றேன்.

நாளையே, யார் தேசியத் தலைவராக வந்தாலும், அவர்கள் தவறு செய்தால், அவர்களிடம் குறையிருந்தால், அதனையும் தயங்காமல், பயப்படாமல் சுட்டிக் காட்டுவேன் என்பதையும் உறுதியுடன் கூறிக் கொள்கின்றேன்.

இன்னொன்றையும் உங்களுக்கு எழுதிக் கொடுத்தவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பழனிவேலு தலைவராகவும், டாக்டர் சுப்ரமணியம் துணைத் தலைவராகவும் அவர்களின் சேவைகள் கட்சியில் தொடர வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்றவர்களின் நிலைப்பாடு.

அதைக் கெடுத்து, கட்சிக்கும் குழப்பம் விளைவித்து, தலைமைத்துவ போராட்டத்தை உருவாக்கி, அதன்மூலம் குறுக்கு வழியில் உள்ளே நுழைந்து அமைச்சர் பதவியை அடைய நினைக்கும் சுயநலவாதிகளுக்கு எதிராக – அவர்களின் முகத் திரையைக் கிழிக்கத்தான் நாங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளோம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள் அல்போன்ஸ் அவர்களே! உங்களுக்கு எழுதிக்கொடுத்தவர்களிடம்!

விளக்கம் # 5

மாரிமுத்து, ராஜூ, வீரசிங்கம் மத்திய செயலவையிலிருந்து விலக்கியது! – மாநிலத் தலைவர்கள் மாற்றம்!

மத்திய செயலவையில் நீண்ட காலமாக நியமன பதவி வகித்து வந்த, 70 வயதாகிவிட்ட, துணையமைச்சர், ஆட்சிக் குழு உறுப்பினர் என பல பதவிகள் வகித்து ஆண்டு அனுபவித்து விட்ட  டான்ஸ்ரீ மாரிமுத்து, டத்தோ ராஜூ, டத்தோ வீரசிங்கம் ஆகியோரைத்தான்  மரியாதையோடு அவர்களின் சேவைகளுக்கு நன்றி கூறி பழனிவேல் மாற்றினார்.

அவர்களுக்கு பதிலாக அவர் நியமித்ததும் யாரைத் தெரியுமா?

13வது பொதுத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்ற, மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ எம்.எஸ்.மகாதேவன், ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஆர்.வித்தியானந்தன், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எல்.மாணிக்கம் ஆகியோரைத்தான்.

புதிதாக பதவியேற்ற ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கட்சியின் உள் விவகாரங்களை அறிந்து கொண்டிருக்க வேண்டும் – அதற்கேற்ப தங்களின் சமுதாய சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தேசியத் தலைவர் மேற்கொண்ட கட்சி மாற்றங்களை – சாமிவேலுவின் சர்வாதிகாரத்தோடு ஒப்பிடுவது எந்தவித நியாயமுமில்லை என்பதை உங்களுக்கு எழுதிக் கொடுத்தவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

டான்ஸ்ரீ நிஜார் இன்னும் மத்திய செயலவையில் நீடிப்பது அவர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் என்பதால்தான் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

அதே போன்றுதான், மாநிலத் தலைவர்களை நியமிப்பது என்பது கட்சியின் சட்டவிதிகளில் வழங்கப்பட்டுள்ள தேசியத் தலைவரின் அதிகாரம். அதனைப் பயன்படுத்துவது – மாநிலத் தலைவர்களை மாற்றுவது அவரின் உரிமை.

ஆனால், கட்சியின் வேட்பாளர்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை ஒதுக்குவது, நீக்குவது, – ஜனநாயக முறைப்படி கிளைத் தலைவர்களும் தொகுதித் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அந்த தொகுதியை மூடுவது என்பதுதான் சர்வாதிகாரம்!  வித்தியாசத்தை எழுதிக் கொடுத்தவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்!.

சில ஊழல் விவகாரங்களை எழுப்பியுள்ளீர்கள்!

இதுவரை போவோர் வருவோரிடம் கூறிக் கொண்டிருந்த ஊழல் புகார்களை இப்போது உங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கின்றார்கள்.

உங்களிடம் ஆதாரம் இருந்தால், தாராளமாக சம்பந்தப்பட்ட காவல் துறையிலோ, ஊழல் ஆணையத்திலோ புகார் செய்யுங்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் பதில் சொல்லட்டும். ஊழல்கள் நடந்திருந்தால் அதற்காக நான் வக்காலத்து வாங்க வரவில்லை.

இறுதியாக ஒன்று!

அல்போன்ஸ் அவர்களே! உங்களின் அறிக்கையில் இரண்டு இடங்களில் “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

ஆனால், உண்மையான கிறிஸ்துவனாக, எல்லா மதங்களையும் ஒன்றெனக் கருதுபவன் என்ற முறையில் கூறிக் கொள்கின்றேன். தயவு செய்து அரசியல் அறிக்கைகளில், கர்த்தரின் பெயரைப் பயன்படுத்தாதீர்கள்!

-இவ்வாறு டத்தோ ஹென்ரி தனது பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருக்கின்றார்.