புதுடெல்லி, ஜூலை 19– டெல்லியில் இன்று தொழில் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த சிறப்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:–
நமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிக்கலான காலக் கட்டத்தில் உள்ளது. அன்னிய செலவாணி சந்தையை உடனடியாக சீரமைக்க வேண்டியதுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நடப்பு கணக்கில் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்து விட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அடிப்படை கட்டமைப்புகள் நல்ல வலுவாக இருந்த போதிலும் நடப்பு நிதியாண்டில் அந்த அளவுக்கு வளர்ச்சி எட்டப்பட வில்லை.
இந்த பொருளாதார மந்த நிலை உலகளாவிய நிலையில் நீடிக்கிறது. இதற்காக கடுமையாக பலரும் அரசை விமர்ச்சிக்கிறார்கள். இது பற்றி தொழில் துறையினர் அச்சம் கொள்ள தேவையில்லை.
பொருளாதார தேக்க நிலையை நீக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே விரைவில் பொருளாதாரம் மேம்பாட்டை எட்டும்.
ஆகையால் தொழில் துறையினர் இது தொடர்பான நேர்மறையான எண்ணங்களை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தொழில் துறையினர் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சிப்பாதை விரைவில் ஏற்படுத்தப்படும்.
அன்னிய நேரடி முதலீடு சலுகைகள் காரணமாக மேலும் பொருளாதார சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியதுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை தற்போது 4.8 சதவீதமாக உள்ளது. அதை 2.8 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக குறுகிய கால நெருக்கடிகள் உடனடியாக கட்டுப்படுத்தப்படும். அடுத்தக்கட்டமாக தேவை மற்றும் உற்பத்தி பிரிவில் உள்ள பிரச்சினைகள் களையப்படும். தேவை பகுதியை பொருத்தவரை தங்கம் இறக்குமதியை நாம் குறைத்தாக வேண்டும். எனவே பொது மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதுபோல பெட்ரோலியம் பொருட்கள் பயன் பாட்டையும் கணிசமாக குறைப்பது நல்லது. அரசு எடுத்து வரும் இத்தகையை சீர்திருத்த நடவடிக்கைகள் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பகுதியில் நல்ல பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த 8 ஆண்டுகளில் நமது பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது. இது அதற்கு முந்தைய 8 ஆண்டுகளை விட சிறப்பாகவே உள்ளது. அந்த வகையில் நாங்கள் நல்லாட்சியை வழங்கியுள்ளோம்.
நாட்டில் வறுமை குறைந்து வருகிறது. 2004–05 ம் ஆண்டு முதல் 2011–12 ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வறுமை 2 சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங் பேசினார்.