நியூயார்க், ஜூலை 21- கடந்த வெள்ளிக்கிழமை அன்று முடிவடைந்த பங்கு சந்தை வர்த்தகத்தில், அமெரிக்க கணினி நிறுவனமான மைக்ரோசாப்டின் பங்கு மதிப்புகள் 11 சதவிகிதத்திற்கும் மேலாகக் குறைந்தன.
இந்நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடுகளான விண்டோஸ் ஆபரேடிங் சாப்ட்வேர் மற்றும் சர்பேஸ் டாப்லெட் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த விலைகள் குறைக்கப்பட்டபோதும், விற்கப்படாத உற்பத்திப் பொருட்களின் மதிப்பு நிறுவனத்தின் வருவாய் மதிப்பினை 900 மில்லியன் டாலர் குறைத்துள்ளது. இதன் பலனாக இந்த வருடத்திய காலாண்டு முடிவுகள் இறங்குமுகத்தில் இருந்தன.
கடந்த 2009ஆம் ஆண்டு உலக பொருளாதார சரிவால் 5,000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆட்குறைப்பு செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போதுதான் அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் குறைந்துள்ளன.
ஒரு கட்டத்தில் 12 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்து, 2000-ஆவது ஆண்டில் பங்குசந்தையில் நுழைந்ததிலிருந்தே ஏற்பட்ட குறைவான மதிப்பு என்ற நிலையிலும் இந்த நிறுவனத்தின் மதிப்புகள் காணப்பட்டது. ஆயினும், பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, மைக்ரோசாப்ட் நிறுவனம், போட்டி நிறுவனமான யாகூவைவிட 34 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு குறைவாக இருந்தது.
வணிக வாடிக்கையாளர்களுடன் நிறுவனத்திற்கு இருந்த பலமான உறவுகள், இந்த விற்பனை சரிவைக் கடக்க உதவும் என்று நினைத்திருந்த பங்குச்சந்தை மதிப்பீட்டாளர்களுக்கு இந்த நிலை அதிர்ச்சியை அளித்தது. இந்த சரிவு முடிவுகள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர், இதன் சாதனங்கள், சேவைகள் குறித்து புதிய வடிவமைப்பிற்குத் திட்டமிட்டுள்ளதை குறித்த சந்தேகங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தது.