நியூயார்க்,ஜூலை 22- பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் 5 நாள் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நியூயார்க் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு ‘விசா’ வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வேன். (2002–ம் ஆண்டு நடந்த குஜராத் இனக் கலவரங்களை முதல்–மந்திரியாக இருந்த நரேந்திரமோடி அடக்கத்தவறி விட்டார் என கூறி அவருக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வருகிறது.)
பாராளுமன்ற தேர்தலுக்கு 7 மாதங்கள் உள்ள நிலையில், கட்சியின் தேர்தல் பிரசார குழுவுக்கு நரேந்திரமோடியை தலைவராக நியமித்துள்ளேன்.
இதில் வழக்கத்துக்கு மாறாக என்ன நடந்துவிட்டது? மற்ற கட்சிகளைப் போன்றே நாங்கள் மோடியை நியமனம் செய்திருக்கிறோம். இதில் எதற்காக கூடுதலாக கவனம் செலுத்துகிறீர்கள்? அவரது செல்வாக்கு, புகழ், கட்சிக்கு அளித்துள்ள வாக்குறுதி அனைத்தையும் கருத்தில் கொண்டே நியமனம் செய்திருக்கிறோம்.
மோடி மிகவும் பிரபலமானவர். தற்போது இந்தியாவின் உயர்ந்த தலைவர். குஜராத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரபிரதேசம், பீகார் என வடக்கில் இருந்து தெற்குவரை, கிழக்கில் இருந்து மேற்கு வரை கூட்டத்தை திரட்டும் சக்திவாய்ந்த தலைவர்.
அவரது செல்வாக்கு, தேர்தல்களில் கட்சிக்கு உதவும்.பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சியையும், ஊழல் மிகுந்த, ஆற்றல் இல்லாத காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியையும் மக்கள் ஒப்பிட்டு பார்த்து, பாரதீய ஜனதாதான் ஒரே தீர்வு என்பதை இப்போது உணர்கின்றனர்.
5 சதவீத பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசால் உத்தரவாதம் வழங்க முடியவில்லை. ஆனால் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறுகிற குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஏறத்தாழ 10 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இனியும் இந்திய வாக்காளர்களை யாரும் முட்டாள் ஆக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
‘‘பாராளுமன்ற தேர்தலில் உங்களை ஏன் நீங்கள் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தவில்லை?’’ என்ற நிருபரின் கேள்விக்கு ராஜ்நாத் சிங், ‘‘மத்தியில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில்தான் நான் கூடுதல் நாட்டம் கொண்டுள்ளேன்.
கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, ஊழல் மலிந்த, மோசமான நிர்வாகம் நடத்துகிற காங்கிரஸ் ஆட்சியை விரட்டி அனுப்புவதே எனது குறிக்கோளாக அமைந்துள்ளது’’ என பதில் அளித்தார்.தேர்தலில் நீங்கள் அளிக்கப்போகிற வாக்குறுதி என்ன? என்ற மற்றொரு கேள்விக்கு ராஜ் நாத் சிங் பதில் அளிக்கையில், ‘‘ராமர் கோவில் விவகாரம் எப்போதுமே பெரிய தேர்தல் பிரச்சினையாக இருந்ததில்லை.
அது ஒரு பெரிய தேசிய பிரச்சினை. ஆனால் தேர்தல் பிரச்சினை அல்ல. வளர்ச்சித்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’’ என கூறினார். ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் தமிழ்நாடு மாநில பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை குறித்து ராஜ்நாம் சிங் குறிப்பிடுகையில், ‘‘தமிழ்நாட்டில் இந்து மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் கொலையை தடுத்து நிறுத்த உதவுமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என கூறினார்.