பெல்ஜியம், ஜூலை 22- ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டின் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட் ( வயது 79), முதுமை காரணமாக மன்னர் பட்டத்தை தனது மகன் பிலிப்பிற்கு நேற்று சூட்டி வைத்தார்.
ஜனநாயக மரபுகளின்படி 20 ஆண்டு காலமாக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கிய மன்னர் இரண்டாம் ஆல்பர்ட், பாராளுமன்றத்தில் மன்னருக்கான தனது அதிகாரங்களை இன்று துறப்பதாக பிரதமர் எல்யோ டி ருப்போ முன்னிலையில் கையொப்பமிட்டார்.
இதனையடுத்து, மன்னரின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதாக புதிய மன்னர் பிலிப் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
பெல்ஜியம் நாட்டின் தேசிய தினமான இன்று புதிய மன்னரின் பதவியேற்பு விழா நடைபெற்றதால் பாராளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த ராணுவ அணிவகுப்பையும் புதிய மன்னர் பிலிப் ஏற்றுக் கொண்டார்.
மன்னர் பதவியை துறக்கப்போவதாக இரண்டாம் ஆல்பர்ட் அறிவித்த சுமார் 3 வாரங்களுக்குள் இன்றைய விழா நடைபெற்றதால் அயல்நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
மொழிவாரி பிரச்சினைகளால் பிளவுபட்டு கிடக்கும் பெல்ஜியத்தின் பாராளுமன்ற தேர்தலை 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நடத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு புதிய மன்னர் பிலிப்பை எதிர் நோக்கியுள்ளது.
அத்துடன் டச்சு மொழி பேசும் 60 லட்சம் மக்களுக்கும், பிரெஞ்சு மொழி பேசும் 45 லட்சம் மக்களுக்கும் தன்னாட்சி உரிமையுடன் கூடிய தனி மாநிலங்களை பிரித்து வழங்க வேண்டிய கடமையும் அவருக்காக காத்திருக்கிறது.
பெல்ஜியம் பாராளுமன்ற வாசலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய மன்னருக்கு மகிழ்ச்சியுடன் கரங்களை அசைத்து நல்வாழ்த்துகளை தெரிவித்தனர்.