புதுடெல்லி, ஜூலை 23 – 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அலைக்கற்றை லைசென்ஸ் பெறுவதற்காக, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி உள்ளிட்ட மேலும் 13 பேரை அரசு தரப்பு சாட்சிகளாக விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
அதன் அடிப்படையில் அனில் அம்பானி மற்றும் டினா அம்பானி ஆகியோர் அரசுத் தரப்பு சாட்சிகளாக வரும் 26-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று இன்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே சி.பி.ஐ. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், நாளை மறுநாள் மற்றொரு அமர்வு விசாரணை நடத்தும் என்று அறிவித்தனர். எனவே, அரசுத் தரப்பு சாட்சியாக சேர்ப்பதில் இருந்து அம்பானிக்கு விலக்கு அளிக்கப்படுமா? என்பது நாளை மறுநாள் தெரிய வரும்.