புதுடெல்லி, ஜூலை 23– பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து விலகியது.
பாரதீய ஜனதாவுடனான கூட்டணியை முறித்ததால் பீகார் முதல்– மந்திரி நிதிஷ் குமாரின் செல்வாக்கு சரிந்து உள்ளது. தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு மூலம் இது தெரியவந்தது.
2011–ம் ஆண்டு ஜூலை மாதம் பீகாரில் நிதிஷ்குமாரின் அரசு மீது 90 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்தனர். ஆனால் கடந்த ஜூன் மற்றும் இந்த மாதம் நடத்திய கருத்து கணிப்பின்படி 69 சதவீதம் பேரே நிதிஷ்குமார் அரசு மீது திருப்தி தெரிவித்து உள்ளனர்.
நிதிஷ்குமார் அரசுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கொடுக்கலாமா? என்று 2011–ம் ஆண்டு கருத்து கேட்கப்பட்டது. 87 சதவீதம் பேர் இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றனர். ஆனால் தற்போது 54 சதவீதம் பேரே மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நிதிஷ்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது பாராளுமன்ற தேர்தல் நடந்தால் பீகாரில் மொத்தம் உள்ள 40 சீட்டுகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 15 முதல் 19 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு 20 இடங்கள் கிடைத்தது.
அதே நேரத்தில் ஓட்டு விகிதம் அந்த கட்சிக்கு 1 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த முறை 24 சதவீதம் கிடைத்தது. ஆனால் தற்போது ஐக்கிய ஜனதா தளத்துக்கு 25 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு சொல்கிறது.
பாரதீய ஜனதா கட்சிக்கு பீகாரில் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகிய பிறகு அந்த கட்சிக்கு முன்னேற்றமே காணப்படுகிறது. 8 சதவீதம் ஓட்டு அதிகரித்து உள்ளது. 2009–ல் பாரதீய ஜனதாவுக்கு 14 சதவீத ஓட்டுகள் கிடைத்தது. தற்போது 22 சதவீத ஓட்டுகள் கிடைக்கும். இதர கட்சிகளின் ஓட்டு பாரதீய ஜனதாவுக்கு கூடுதலாக கிடைக்கிறது.
அதே நேரத்தில் கைப்பற்றும் இடங்கள், எண் ணிக்கையில் மாற்றம் இல்லை. கடந்த முறை 12 எம்.பி. சீட் கிடைத்தது. தற்போது 8 முதல் 12 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது. கடந்த முறை 4 இடங்களை பிடித்த அந்த கட்சி தற்போது த 8 முதல் 12 இடங்கள் வரை பெறும்.
காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதத்தில் மாற்றம் இல்லை. அதே 10 சதவீத ஓட்டுகளே இருக்கிறது.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே இருக்கிறது. மொத்தம் உள்ள 42 இடங்களில் திரிணாமுல் காங்கிரசுக்கு 23 முதல் 27 இடங்கள் வரை கிடைக்கும். கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு 19 இடங்களே கிடைத்தது.
இடதுசாரிகளுக்கு 7 முதல் 11 இடங்கள் வரையும் (கடந்த முறை 15), காங்கிரசுக்கு 5 முதல் 9 சீட்டுகள் வரையும் (கடந்த முறை 6) கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.