வாஷிங்டன், ஜூலை 25- அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜான் எப் கென்னடியின் மகளான கரோலின் கென்னடி ஒரு வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும் உள்ளார்.
கென்னடியின் நீடித்த அரசியல் வம்சத்தின் ஒரே வாரிசாக இருக்கும் இவரை, நேற்று ஜப்பான் நாட்டின் தூதுவராக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்தார்.
அமெரிக்காவில் முக்கியத்துவம் பெற்றவர்களே ஜப்பானின் தூதுவர்களாக இதுவரை நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டலே, முன்னாள் சபாநாயகர் டாம் போலே, முன்னாள் செனட் பெரும்பான்மைத் தலைவர் மைக் மன்ஸ்பீல்ட் மற்றும் ஹோவர்ட் பெக்கர் போன்றோரே இந்தப் பதவியில் இருந்திருக்கின்றனர்.
தற்போது கரோலின் இந்தப் பதவியைப் பெறும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகின்றார். இதுவரை எந்த அரசுப்பணியிலும் கரோலின் இருந்ததில்லை.
கரோலினின் ஜப்பானிய அறிவு மற்றும் அரசியல் அனுபவம் குறித்து கேட்கப்பட்டதற்கு, ஒரு தூதராக அதிபர் ஒபாமாவை விரைந்து தொடர்பு கொண்டு காரியங்களை செயல்படுத்தும் அளவிற்கு கரோலின் திறமையுடையவர் என்று அமெரிக்காவின் கிழக்கு ஆசிய விவகார மாநில துணை செயலாளராக இருந்த ஜப்பான் நிபுணரான குர்ட் எம் கேம்ப்பெல் தெரிவித்தார்.