கோலாலம்பூர், ஜூலை 26- சிறிய புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம்.
ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை.
எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள். அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள்.
பிறரை வசீகரப்படுத்தவும், எப்படிப்பட்ட நபரையும் கையாளுவதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வீடாக இருந்தாலும் சரி, பணியாற்றும் இடமாக இருந்தாலும் சரி, புன்னகை பூத்திடுங்கள்.
உங்கள் முசுடு உயரதிகாரியையோ அல்லது கோபக்கார கணவனையோ பார்த்து உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றாலும், செயற்கையாக நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும், காலப் போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் உங்களை நடத்தும் விதம் மாறலாம்.
குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் இழிவான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்ந்தால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள்.
அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.