சிரம்பான், ஜூலை 29 – ‘மை வாட்ச்’ என்ற இயக்கத்தின் தலைவரான ஸ்ரீ சஞ்சீவன் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்ட சம்பவத்தை விசாரணை செய்ய காவல்துறை சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில காவல்துறை தலைவர் டத்தோ ஒஸ்மான் சாலே கூறினார்.
குற்றவியல் சட்டம் 307 வது பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் இச்சிறப்பு குழுவிற்கு தலைமை வகிப்பார் என்று நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஒஸ்மான் கூறினார்.
தற்போது சிரம்பானிலுள்ள துவாங்கு ஜபார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள சஞ்சீவனின் வயிற்றுப் பகுதியில் பாய்ந்துள்ள தோட்டாவை அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.
இதனிடையே சம்பவத்தின் போது சஞ்சீவனுடன் காரில் சென்ற அவரது நண்பரை காவல்துறை தடுத்து வைத்துள்ளது. ஸ்ரீ சஞ்சீவன் துப்பாக்கி சூட்டுக்கு ஆளான சம்பவம் குறித்து அவர் காவல்துறையில் புகார் செய்த போது அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் ஒஸ்மான் தெரிவித்தார். எனினும் அவர் தடுத்து வைக்கப்பட்டதற்கும், இந்த துப்பாக்கி சூட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து மாநில போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினரால் தேடப்பட்டு வரும் நபர்களின் பெயர் பட்டியலில் அவரது பெயரும் உள்ளதால் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒஸ்மான் விளக்கம் அளித்தார்.
‘மை வாட்ச்’ (Malaysian Crime Watch Task Force) என்ற அரசு சாரா இயக்கத்தின் தலைவரான ஸ்ரீ சஞ்சீவன் கடந்த சனிக்கிழமையன்று பிற்பகல் 4 மணியளவில் பகாவ், தாமான் செம்பாக்கா என்னுமிடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூடு பழிவாங்கும் எண்ணத்தோடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.