கோலாலம்பூர், ஜூலை 30 – கடந்த மே மாதம் 21 ஆம் தேதி, தடுப்புக் காவலில் மரணமடைந்த என்.தர்மேந்திரனின் இறப்பில் தொடர்புடைய நாலாவது அதிகாரி எஸ்.ஹரே கிருஷ்ணன் இன்று அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவியல் சட்டம் 302 மற்றும் 34 ன் பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி எதிர்பார்க்கப்படும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு, இவ்வழக்கு குறித்து முடிவெடுக்கப்படும் என்று நீதிபதி நூர் அமினாதுல் மார்டியா முகமட் நூர் தெரிவித்தார்.
ஹரே கிருஷ்ணாவின் சார்பாக எஸ்.கவிதா மற்றும் என்.கல்யாண சுந்தரம் ஆகியோர் பிரதிநிதித்தனர்.
ஹரே கிருஷ்ணா நேற்று காலை டாங் வாங்கி காவல்துறைத் தலைமையகத்தில் சரணடைந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள், அவர் நீதிமன்றத்தில் நிறுதப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் ஹரே கிருஷ்ணா தலைமறைவாக இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
ஆனால் அவரது மனைவி நேற்று விடுத்த அறிக்கையில், தனது கணவர் தப்பியோடவில்லை என்றும், தனது சார்பாக வழக்கறிஞர் ஒருவரை நியமித்திருந்தார் என்றும் கூறினார்.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக ஹரே கிருஷ்ணா சத்தியப் பிரமாணம் ஒன்றை செய்திருப்பதாகவும் அவரது மனைவியான ஷார்மினி நேற்று தெரிவித்தார்.