Home நாடு அராப் மலேசியன் வங்கி நிறுவனர் கொலையில் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டது!

அராப் மலேசியன் வங்கி நிறுவனர் கொலையில் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டது!

663
0
SHARE
Ad

murder1கோலாலம்பூர், ஜூலை 31 -அராப் மலேசியன் மேம்பாட்டு வங்கியின் (Ambank) நிறுவனர் உசேன் அகமட் நஜாடியை சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் கொலையாளியின் புகைப்படத்தை இன்று காவல்துறை வெளியிட்டுள்ளது.

கோலாலம்பூர் காவல்துறை தலைமையகம் இன்று முகநூல் வழியாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “செய் கான் சாய்- நான்கு கண்களைக் கொண்டவன்) என்ற புனைப்பெயரைக் கொண்ட ஜியான் தான் இக்கொலையில் முக்கியக் குற்றவாளி என்று தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு கேமெரா மூலமாக சந்தேகிக்கப்படும் அந்த நபரின் புகைப்படத்தை கண்டுபிடித்த காவல்துறை, அவருக்கு பெரிய நெத்தியையும், கறுப்பு வெள்ளை கட்டம் போட்ட சட்டையும், கண்ணாடியும் அணிந்திருந்தாகக் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“இக்கொலை தொடர்பாக ஆரம்பக் கட்ட விசாரணையாக, சந்தேகத்திற்குரிய அந்த கொலையாளியை ஜாலான் ஆ லோயில் இருந்து ஜாலான் செய்லானில் உள்ள கோவிலுக்கு அருகில் இறக்கிவிட்ட வாடகைக்கார் ஓட்டுநர் ஒருவரை காவல்துறை தடுத்து வைத்துள்ளது” என்று கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் கு சின் வா கூறியுள்ளார்.

மேலும், இக்கொலையில் மூவர் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகப்பட்டு, தற்போது இக்கொலையை ஒருவர் மட்டுமே செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளதாக சின் வா தெரிவித்துள்ளார்.

உசேனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்கள் 9எம்எம் தானியங்கி கைத்துப்பாக்கி வகையைச் சேர்ந்தவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், நிலம் தொடர்பாக கோவிலில் உசேனை சந்தித்த மற்றொரு நபரிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சின் வா தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடந்த இத்துப்பாக்கி சூட்டில், உசேன் (வயது 75) சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி சியோங் மெய் குவென் (வயது 49) காயமடைந்தார். சொத்து விவகாரம் தொடர்பாக இக்கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

காவல்துறை வெளியிட்டுள்ள சந்தேகத்துக்குரிய அந்த நபரை அறிந்தவர்கள் அல்லது அவரைப் பற்றிய தகவல்களை தெரிந்தவர்கள், 03-2146 0685 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கோலாலம்பூர் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அல்லது Rakan Cop  03-2115 9999  அவசர அழைப்பு எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை கூறியுள்ளது.

அத்துடன், 32728 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் பொதுமக்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.