கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – தேசிய முன்னணியுடனான ஹிண்ட்ராப்பின் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனால் தான் தனது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளை தன்னால் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை வந்தால், ஒரு நிமிடம் கூட தான் பதவியில் இருக்கப் போவதில்லை என்று பிரதமர் துறையில் துணையமைச்சரான வேதமூர்த்தி இன்று தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்திய சமுதாயத்தின் நீண்ட கால பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பிரதமர் நஜிப் தன்னை நியமித்திருப்பதாகவும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும் வேதமூர்த்தி உறுதியளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலுக்கு முன்னர், தேசிய முன்னணியும், ஹிண்ட்ராப் இயக்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில் இந்தியர்களின் பொருளாதார நிலையையும், அவர்களுக்கு சமூகத்தில் ஒரு நிலையான இடத்தையும் தேசிய முன்னணி வழங்கும் என்று நஜிப் வாக்குறுதி அளித்தார்.