கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – ஜசெக கட்சி சீனர்களின் மேலாதிக்கம் கொண்டது,இனவாதமிக்கது என்று கூறப்படுவதை பினாங்கு துணை முதலமைச்சர் (II) ராமசாமி மறுத்துள்ளார்.அதோடு இது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
“ஜசெக வில் சீனர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அது இனவாத கட்சியாக ஆகிவிடாது. நாம் அனைவரும் மலேசியர்கள். நமது கொள்கைகள் அனைத்தும் எல்லா சமுதாயத்திற்கும் பொதுவானது” என்றும் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தேசிய முன்னணியைப் பாருங்கள். அது தான் இனவாத கட்சியாகப் பிரிந்து கிடக்கிறது. ஆனால் ஜசெக அப்படியல்ல. சீனர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக அதை இனவாதம் என்று கூறக்கூடாது” என்று ராமசாமி தெரிவித்துள்ளார்.
ஜசெகவில் இருந்து பலர் இனவாத நோக்கத்தோடு நீக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துரைத்த ராமசாமி, “கட்சிகள் இருந்து நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். ஆனால் அதற்கும் இனத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
அவர்கள் கட்சியின் கொள்கைகளை மீறியதால் தான் நீக்கப்பட்டார்கள். ஜசெக வில் கட்டுப்பாடு மிகவும் முக்கியம் என்பதோடு உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அது போன்று கட்டுப்பாடோடு இருந்ததால் தான் பொதுத்தேர்தலில், ஜசெகவால் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றியடைய முடிந்தது. அதுமட்டுமின்றி அரசாங்கத்தில் இந்தியர்கள் பிரதிநிதிப்பதையும் ஜசெக அதிகப்படுத்தியுள்ளது என்றும் ராமசாமி கூறியுள்ளார்.