Home வணிகம்/தொழில் நுட்பம் ரெயில் பெட்டிகளில் சூரிய சக்தியில் இயங்கும் ஏ.சி.: சென்னை ஐ.ஐ.டி. புது முயற்சி

ரெயில் பெட்டிகளில் சூரிய சக்தியில் இயங்கும் ஏ.சி.: சென்னை ஐ.ஐ.டி. புது முயற்சி

692
0
SHARE
Ad

சென்னை, ஆக.6- உலகின் மிகப்பெரிய ரெயில்வே அமைப்பைக் கொண்ட இந்திய நாட்டில் எதிர்காலத்தில் குளிர்சாதன வசதிகள் கொண்ட பெட்டிகளின் தேவைகள் அதிகமாக இருக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டு எரிபொருள் மற்றும் மின்சாரம் கொண்டு இத்தகைய வசதிகளைப் பெறுவதற்கு மாற்று சக்தி தேவை என ரெயில்வே நிர்வாகம் கருதுகின்றது.

Indian-railwaysஇதன்விளைவாக சென்னையில் இயங்கிவரும் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்துடன் ரெயில்பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையான ஐ.சி.எப். இணைந்து சென்ற மாதம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த ஒப்பந்தத்தின் மூலம் சூரிய சக்தியை உபயோகித்து ரெயில் பெட்டிகளின் உட்புற விளக்கு வசதி மற்றும் குளிர்சாதன வசதிகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வல்லுனர்கள் கண்டறிவார்கள்.

இதற்கான பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ஐ.சி.எப்.பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் வெற்றி பெறுமேயானால் அதிகப்படியான டீசல் என்ஜின்களை இணைத்து ரெயில் பெட்டிகளுக்கு மின்சாரம் பெறுவது நிறுத்தப்படலாம்.

ஆயினும், அதற்கு முன்னால் இத்திட்டத்தின் மூலம் பெறமுடியும் மின்சக்தி குறித்து வல்லுனர்கள் தெளிவாக வரையறுக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐ.சி.எப். தயாரிக்கும் பெட்டிகளிலேயே இந்தப் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

ஆனால், இத்திட்டம் நடைமுறைக்கு வரும் காலம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. குளிர்சாதனப் பெட்டிகள் இணைத்த ரெயில்கள் ஒரு நாளிலேயே பலவகையான தட்பவெப்பநிலை மாறுபாடுகளைக் கொண்ட மாநிலங்களில் பிரயாணம் செய்வதால் அவற்றிக்கு தொடர்ந்து மின்சக்தி அளிப்பது என்பது ரெயில்வேதுறைக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.

சென்னை- பெங்களூரு இடையே புதிதாய் நடைமுறைக்கு வந்த அடுக்குமாடி வசதி கொண்ட பெட்டியிலும் சமீபத்தில் மின்தடை ஏற்பட்டது. சென்ற ஆண்டு, சென்னை- திருவனந்தபுரம் ரெயிலில் குளிர்சாதனப் பெட்டிகளில் சென்ற பயணிகள் மின்தடையால் அவதிப்பட நேர்ந்தது.

ஐ.சி.எப். நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் சில காற்றாலைகளை அமைத்து அதன்மூலம் கிடைக்கக்கூடிய மின்சாரத்தை உபயோகித்து வருகிறது. தற்போது மேலை நாடுகளில் கூட அரிதாகக் காணப்படுகின்ற சூரிய ஒளி சக்தியை முயற்சித்துப் பார்க்கும் திட்டத்திலும் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.