கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – அராப் மலேசியன் வங்கியின் நிறுவனர் அகமட் ஹூசைன் நஜாடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். நிலத்தகராறு காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையோடு இக்கொலை நடத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத்துறைத் தலைவர் கு சின் வா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,“இந்த கொலையில் தொடர்புடையதாக நம்பப்படும் சிலரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருகிறோம். அவர்களில் 42 வயதுடைய நபர் ஒருவரும், சீன கோயில் ஒன்றின் நிர்வாகப் பிரிவில் இருக்கும் இரண்டு பெண்களும் இதில் அடங்குவர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நிலத்தகராறு காரணமாகத் தான் இக்கொலை நடந்துள்ளது என்று குறிப்பிட்ட கு, கைது செய்து வைத்துள்ளவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதையும் விசாரணை செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
கோங் சீ கவான் என்ற அந்த கொலையாளி தப்பி ஓடிவிட்டார் என்றும், எனினும் அவன் மலேசியாவில் தான் பதுங்கியிருப்பதாகவும் கு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு கோங் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார் ஆனால் இதுவரை கொலை வழக்கு அவர் மேல் இல்லை என்றும் கு குறிப்பிட்டுள்ளார்.