Home 13வது பொதுத் தேர்தல் பொதுத் தேர்தலில் என் சகோதரி போட்டியா? – லிம் குவான் மறுப்பு

பொதுத் தேர்தலில் என் சகோதரி போட்டியா? – லிம் குவான் மறுப்பு

715
0
SHARE
Ad

lim-guan-engபினாங்கு, பிப்.7- பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் சகோதரி வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளார் என்ற ‘பொய்யான’ செய்தியை வெளியிட்டதன் மூலம் தி ஸ்டார் நாளேடு மீண்டும் லிம்-மைக் காயப்படுத்தியுள்ளது.

“அது தி ஸ்டார் ஏட்டின் முழுமையான பொய். அந்த ஏடு சில வலைப்பதிவுகளிலிருந்து அதனை எடுத்துள்ளது.  மாநில ஜசெக தலைவர் சாவ் கோன் இயாவ், என் சகோதரி ஹுய் யிங் ஆகியோரிடம் இது குறித்து விவரம் கோரியுள்ளேன்,” என ஜசெக தலைமைச் செயலாளருமான அவர் இன்று நிருபர்களிடம் விவரமாகக் கூறினார்.

“சாவ் அந்த வதந்திகளை மறுத்துள்ளார். போட்டியிடும் எண்ணமே தமக்கு இல்லை என என் சகோதரி சொல்கிறார். இருந்தும் தி ஸ்டார் அதனைத் தலைப்புச் செய்தியாக போட்டுள்ளது,” என லிம் வருத்தத்துடன் கூறினார்.

#TamilSchoolmychoice

“தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்கு ஆர்வம் இருந்தால் கடந்த மூன்று தேர்தல்களில் அவர் போட்டியிட்டிருக்க முடியும். அந்த எண்ணம் அவருக்கு அப்போதும் இல்லை. இப்போதும் இல்லை,” என அவர் வலியுறுத்தினார்.

“தி ஸ்டார் இது போன்ற செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம். தி ஸ்டார் சொல்வதை நம்ப வேண்டாம் என்று மட்டுமே நான் பொதுமக்களைக் கேட்டுக் கொள்ள முடியும்.” என்று அவர் மேலும் கூறினார்.

ஹுய் யிங் போட்டியிடுவார் என்பதையும் போட்டியிலிருந்து சுங்கை பூயூ சட்ட மன்ற உறுப்பினர் பீ பூன் போ விலகிக் கொள்வார் என்பதையும் சாவ் மறுத்த பின்னர் அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பினாங்கு ஜசெகவிடம் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வமுள்ள 45 வேட்பாளர்கள் இருப்பதாகவும் நாடாளுமன்றம் பெரும்பாலும் சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் கலைக்கப்பட்டதும் அந்த எண்ணிக்கை சுருக்கப்படும் என்றும் சாவ் தெரிவித்தார்.

பக்காத்தான் ராக்யாட் பற்றி ‘பொய்களை’ வெளியிடுவதால் அம்னோவுடன் தொடர்புடைய உத்துசான் மலேசியா, நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஆகிய நாளேடுகள் மீது தாம் நம்பிக்கை இழந்து விட்டதாகவும்  லிம் சொன்னார்.

உத்துசான் மலேசியாவுக்கு எதிராக தாம் இரு முறை தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளதையும் லிம் சுட்டிக் காட்டினார்.

“அவதூறுகளை’ பரப்புகின்றவர்களுடன் இப்போது தி ஸ்டாரும் சேர்ந்து கொண்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.