சிங்கப்பூர், ஆகஸ்ட் 7 – மலேசிய அரசியலில் இருந்து வரும் இனவாதக் கொள்கைகள் தான் நாட்டிற்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நேற்று வெளியிடப்பட்ட லீ குவான் இயூவின், “ஒரு மனிதனின் பார்வையில் உலகம்” என்ற புதிய புத்தகத்தில், “எல்லா இனங்களிலும் உள்ள திறமைகளை வெளிப்படுத்தும் சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஆற்றலை இந்த இனப்பாகுபாடு சுருக்கிவிடுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஒரு இனத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கத்தில் இந்த ஆற்றல்கள் அனைத்தையும் அவர்கள் இழந்து விடுகிறார்கள்” என்றும் லீ குவான் கூறியுள்ளார்.
“துடிப்பான ஆற்றல் மிக்க பலரை இந்த இனவாதப் போக்கின் காரணமாக அண்டை நாடுகளிடம் இழந்து விட்டதை மலேசியா இப்போது தான் உணரத்தொடங்கியுள்ளது. அதனால் தான் வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களை மீண்டும் திரும்பப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”
“ஆனால் காலம் கடந்து விட்டது. இந்த முயற்சி மிகவும் தாமதமான ஒன்று” என்று லீ எழுதிய புத்தகத்தில் ‘மலேசியாவின் மாறுபட்ட பாதை’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“மலேசியா இழந்து வருகிறது. மற்ற நாடுகள் வெற்றி பெற சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது” என்றும் லீ தெரிவித்துள்ளார்.