Home One Line P2 சிங்கப்பூர் : லீ குவான் இயூவின் ஒரு மகன், இன்னொரு மகனை அரசியலில் வீழ்த்துவாரா?

சிங்கப்பூர் : லீ குவான் இயூவின் ஒரு மகன், இன்னொரு மகனை அரசியலில் வீழ்த்துவாரா?

1090
0
SHARE
Ad

சிங்கப்பூர் : 1965 முதல் ஒரே கட்சி ஆட்சியின் கீழ் இயங்கி வரும் சிங்கப்பூர் எதிர்பாராத ஒரு திருப்ப அரசியலைச் சந்திக்கிறது. மறைந்த பிரதமர் லீ குவான் இயூ கூட கனவிலும் நினைத்திருக்க முடியாத திருப்பம் அது.

நடப்பு பிரதமரும் லீ குவான் இயூ மகனுமான லீ சியன் லூங்கை எதிர்த்து அரசியல் களம் நுழைந்திருக்கிறார் லீ குவான் இயூவின் இன்னொரு மகன் லீ சியன் யாங். சியன் லூங்கிற்கு இளையவர்.

சிங்கப்பூரின் ஆளும் கட்சியான பிஏபி கட்சிக்கு எதிர் அரசியல் நடத்த தொடங்கப்பட்டிருக்கிறது புதிய கட்சி ஒன்று. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி என்பது அதன் பெயர் (Progress Singapore Party).

#TamilSchoolmychoice

அந்தக் கட்சியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் லீ சியன் லூங்கின் தம்பியான லீ சியன் யாங்.

எதிர்வரும் ஜூலை 10-ஆம் தேதி சிங்கப்பூர் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்தத் தேர்தலில் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் சியன் யாங் கூறியிருக்கிறார்.

லீ குவான் இயூ காலமெல்லாம் செதுக்கி செதுக்கி சிங்கப்பூரின் எதிர்கால பிரதமராக உருவாக்கியவர்தான் அவரது மகன் லீ சியன் லூங்.

மலேசியாவிலிருந்து பிரிந்து சென்ற பின்னர் 1965-ஆம் ஆண்டு முதல் அங்கு ஏகபோக தனியாட்சி நடத்தி வருகிறது பிஏபி கட்சி. அந்தக் கட்சியின் தலைவர் என்ற முறையில் லீ சியன் லூங்கிற்கு அரசியல் ரீதியாக பெரிய எதிர்ப்பு எழாது என்றே கருதப்பட்டது.

எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் பிஏபி கட்சியும் மீண்டும் எளிதாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், 68 வயதான லீ சியன் லூங் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உடல்நலக் குறைவை எதிர்நோக்கி வருகிறார். இதன் காரணமாக, அவருக்கு அடுத்த நிலையில் சிங்கப்பூரையும், பிஏபி கட்சியையும் வழிநடத்தப் போகிற, மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் யார் என்ற கேள்வியும் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் அவரது சொந்த சகோதரரே அவருக்கு எதிராக இன்னொரு அரசியல் கட்சியில் இணைந்திருப்பது புதிய பரபரப்பையும், திருப்பங்களையும் சிங்கை அரசியலில் ஏற்படுத்தியிருக்கிறது.

உடனடியாக ஜூலை 10 தேர்தலில் சியன் யாங் பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது. அது எல்லாருக்கும் தெரிந்ததுதான்! ஆனால் லீ குவான் இயூவின் இன்னொரு மகன் என்ற பிரபலமான பிம்பத்துடன் அரசியல் களமிறங்கியிருப்பதால், அடுத்து வரும் ஆண்டுகளில் அவரால் மக்களிடையே தன்னை அடுத்த கட்டத் தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.

லீ சியன் லூங்கிற்குப் பிறகு லீ குவான் இயூவின் இன்னொரு மகன் சிங்கையின் தலைமையை ஏற்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள். கட்சி வேறு என்பதுதான் ஒரே பிரச்சனை.

சிறந்த பின்னணி கொண்டவர் சியன் யாங்

சியன் யாங்கும் சிறந்த கல்வித் தகுதிகளையும் ஆற்றலையும் அனுபவத்தையும் கொண்டவர். எந்த விதத்திலும் சியன் லூங்கை விட மதிப்பு குறைந்தவர் அல்ல!

லீ குவான் இயூவின் மரணத்திற்குப் பின்னர் அவரது பிள்ளைகளிடையே சொத்து நிர்வகிப்பில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் பகிரங்கமாகவே பொது அரங்கில் வெடித்தன.

இரண்டு சகோதரர்களும் பகிரங்கமாகவே கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது அது ஒரு குடும்பப் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டது.

அரசியல் போராட்டக் களத்தில் எதிரும் புதிருமாக இரண்டு சகோதரர்களும் இறங்குவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

சியன் யாங் 63 வயதானவர். சிங்கப்பூர் இராணுவப் படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவி வகித்தவர்.

உயர்நிலைக் கல்வியை அவர் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று முடித்த காரணத்தால் அவருக்கு சிங்கை அதிபரின் உபகாரச் சம்பளமும், சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் வெளிநாட்டுக் கல்விக்கான உபகாரச் சம்பளமும் வழங்கப்பட்டது.

கேம்ப்ரிட்ஜ் (பிரிட்டன்) பல்கலைக் கழகத்தின் புகழ் பெற்ற டிரினிடி கல்லூரியில் பொறியியல் அறிவியல் துறையில் (Engineering Science) அவர் பட்டம் பெற்றார். அந்தத் துறையில் இரட்டை முதல்நிலை தேர்ச்சியோடு (double first) அவர் கல்வியை முடித்தார். அதன் பின்னர் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.

சிங்கை ஆயுதப் படையில் பணியாற்றி விட்டு விலகிய அவர், பிரேசர் அண்ட் நீவ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார். சிங்கை வான் போக்குவரத்து ஆணையத்தின் தலைவராகவும் 2009 முதல் 2018 வரை பணியாற்றினார்.

கொவிட்-19 பிரச்சனைகளால் சிக்கித் தவிக்கும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். முற்றாக அந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு முன்னரே சிங்கப்பூரில் தேர்தல் நடத்தப்படுகிறது.

நடப்பு சூழ்நிலையில் லீ சியன் லூங் எளிதாக ஜூலை 10 பொதுத் தேர்தலில் வாகை சூடுவார். எதிர்ப்பு வாக்குகள் எத்தனை, எத்தனை தொகுதிகள் எதிர்க்கட்சிகள் வசம் செல்லும் என்பதே எதிர்பார்க்கப்படும் கேள்விகள்!

பொதுத்தேர்தலுக்குப் பின்னரே சிங்கப்பூரின் உண்மையான அரசியல் களப் போராட்டங்கள் தொடங்கும்.

தனக்குப் பின்னர் யார் என ஒருவரை சியன் லூங் அடையாளம் காட்ட வேண்டும். அவரை பிஏபி கட்சி ஏற்றுக் கொண்டாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தப் புதிய அடுத்த சிங்கை பிரதமரையும் அவர் சார்ந்திருக்கும் பிஏபி கட்சியையும் ஆதரிப்பதா?

அல்லது லீ குவான் இயூவின் இன்னொரு மகனை – சியன் யாங்கை – சிங்கையின் அடுத்த தலைவராகவும் – அவர் சார்ந்திருக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியையும் ஏற்றுக் கொள்வதா?

என்ற நெருக்கடிக்கு சிங்கை மக்கள் தள்ளப்படுவார்கள்!

சிங்கை அரசியலிலும் இத்தகைய சுவாரசியம் நிகழும் என்பதை யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்!

-இரா.முத்தரசன்