கோலாலம்பூர்: ஜூலை 1 முதல் 250 பேர் வரை திருமண வரவேற்புகள் உள்ளிட்ட சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நிச்சயதார்த்த வரவேற்புகள், திருமண ஆண்டுவிழா மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் தஹ்லீல், அகிகா, தோவா சேலாமட் போன்ற மத விழாக்களும் அனுமதிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
“விழா மூன்று முதல் ஐந்து மணி நேரம் வரை நடத்தப்படலாம். மேலும், ஒரு நேரத்தில் 250 பேருக்கு மட்டுமே இருக்க வேண்டும். இது இடத்தின் அளவிற்கு உட்பட்டது. அமன்ரு சாப்பிடுவது அனுமதிக்கப்படவில்லை. ஆனால், உணவு பணியாளர்களால் வழங்கப்பட்டால் வழங்கப்படலாம்.” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
விருந்தினர்களின் உடல் வெப்பநிலை நுழைவாயிலில் எடுக்கப்படுவதை ஏற்பாட்டாளர்கள் உறுதிசெய்வது, வருகை தருபவர்கள் முகக்கவசங்களை அணிந்துகொள்வது மற்றும் விருந்தினர்களின் தனிப்பட்ட விவரங்களை மைசெஜ்தெரா பயன்பாட்டைப் பயன்படுத்தி அல்லது கைமுறையாக பதிவுசெய்வதை உறுதிசெய்வது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
கூட்ட நெரிசலைத் தடுக்க இடத்தின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் இடத்தை பிரித்து வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், கொவிட்19 பரவுவதைத் தடுக்கும் நடமுறைக்கு விருந்தினர்களை நிர்வகிப்பது கடினம் என்று கண்டறிந்தால் இந்த நிகழ்ச்சிகளைத் தொடரக்கூடாது என்று அவர் கூறினார்.