சென்னை, ஆக. 7– மகள் பிடிவாதத்தால் இயக்குனர் சேரன் உடைந்து போய் இருக்கிறார்.
உயர்நீதிமன்றம் நேற்று ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்த போது சேரன் மனைவி செல்வராணியுடன் வந்து இருந்தார். மகள் தாமினியும் வந்து இருந்தார்.
இரு வாரங்கள் தாமினி படித்த பள்ளிக் கூடத்தின் தாளாளர் வீட்டில் அவரை தங்க வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இயக்குனர் சேரனிடம் பேசிய போது ஒரு தந்தையின் வலிகளை உணர முடிந்தது. அவர் கூறியதாவது:–
எந்த விதத்திலும் எனது சொந்த பலத்தை நான் பயன்படுத்தவில்லை. இந்த பிரச்சினையை சட்டத்தின் உதவியோடு நேர்மையாக தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பத்திரிகையாளர்களை சந்தித்த போது நான் அழுது விட்டேன். மகள் மீதுள்ள பாசத்தால் அழுகிறேன்.
திரையுலகில் எல்லோரும் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். இயக்குனர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என் இதயம் காயப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திரையுலகினர் எனக்கு துணையாக இருப்பது வலிக்கு மருந்தாக உள்ளது.
என் மகள் மேல் எந்த தப்பும் இல்லை. அவளுக்கு இருபது வயதுதான் ஆகிறது. வாழ்க்கை பற்றி புரியாத வயது. இது கோபப்படுவதற்கான நேரம் அல்ல. அவளுக்கு நல்லது நடக்க போராடுகிறேன். இவ்வாறு சேரன் கூறினார்.