கோலாலம்பூர், ஆக. 12- வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும்.
இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.
நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து.
மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும்.
அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும். நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது.
இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.
கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும்.
இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.
உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும்.
மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. எனவே, இக்கீரையை உணவில் தினமும் சேர்த்து சாப்பிடுவதனால், நலமான வாழ்க்கை வாழலாம்!