நியூயார்க், ஆக. 12- ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி-மூன் 2 நாள் பயணமாக நாளை (செவ்வாய் கிழமை) பாகிஸ்தான் செல்கிறார்.
ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் அவர், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் நவாஸ் ஷெரீப், பாராளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
பாகிஸ்தானில் போலியோ நோயை முற்றிலுமாக ஒழிப்பது, கல்வி மேம்பாடு, குறிப்பாக பெண்கள் கல்வி மேம்பாடு போன்றவை தொடர்பாக அந்நாட்டின் தலைவர்களுடன் அவர் விவாதிப்பார்.
உலகளாவிய அளவில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் நைஜீரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே இன்றளவும் பலர் போலியோ நோய்க்கு பலியாகி வருகின்றனர்.
எனவே, உரிய சொட்டு மருந்து முகாம்களை நடத்தி பாகிஸ்தானில் போலியோ மரணங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பான் கி-மூன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.