ஆகஸ்ட் 13 – பிளேக் பெர்ரி விவேகக் கைத்தொலைபேசிகளை தயாரிக்கும் கனடா நாட்டைச் சேர்ந்த ரிசேர்ச் இன் மோஷன் என்ற நிறுவனம் தொடர்ந்து வர்த்தக சரிவை எதிர்நோக்கி வருகின்றது.
அதனால் செலவினங்களை குறைக்கும் நோக்கிலும், தனது உற்பத்தித் திறனை மறு சீரமைப்பு செய்யும் நோக்கிலும் தனது 250 பணியாட்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பணியாட்களை இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதியாண்டில் ஏறத்தாழ 5,000 பணியாட்களை இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. தனது பங்குதாரர்களின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 84 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
விவேகக் கைத் தொலைபேசிகளை முதன் முதலாக அறிமுகம் செய்த பிளேக் பெர்ரி நிறுவனம் வர்த்தகத்தில் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரு காலாண்டிலேயே 14 மில்லியன் கைத்தொலைபேசிகளை ஏற்றுமதி செய்த ஒரு கால கட்டமும் இருந்தது.
ஆனால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 6.8 மில்லியன் கைத்தொலைபேசிகளை மட்டுமே பிளேக் பெர்ரி ஏற்றுமதி செய்தது. இவற்றில் பெரும்பாலானவை, பிளேக் பெர்ரியின் ஆகக் கடைசியான மென்பொருள் தொழில் நுட்பத்தை உள்ளடக்கிய கைத்தொலைபேசிகள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் போட்டி
ஆப்பிள் நிறுவனம் கைத் தொலைபேசி உற்பத்தி உலகில் நுழைந்து, அதிநவீன தொழில் நுட்ப சிறப்பம்சங்களுடன் உருவாக்கி வெளியிட்ட ஐ-போன்கள் உலகெங்கிலும் கைத் தொலைபேசி வர்த்தக சந்தையை ஆக்கிரமிப்பு செய்ய, அதைத் தொடர்ந்து சாம்சுங் என்ற கொரிய நிறுவனமும், குறிப்பிடத்தக்க சந்தை விகிதாச்சாரத்தை கைப்பற்றியதன் காரணமாக, இவற்றையெல்லாம் எதிர்பாராத பிளேக் பெர்ரி நிறுவனம் தற்போது வர்த்தக ரீதியாக பலத்த சரிவை எதிர்நோக்கி இருக்கின்றது.
ஆப்பிள் நிறுவனக் கருவிகளுக்குப் போட்டியாக பிளேக் பெர்ரி அறிமுகப்படுத்திய பிளேபுக் ஐ-பேட் போன்ற கையடக்கக் கருவிகளும் சந்தையில் வெற்றிடைய முடியவில்லை. இதனால், இந்த கையடக்கக் கருவியை உருவாக்கும் இலாகாவின் தலைவர் தற்போது தனது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, நிறுவனத்திலிருந்து விலகுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிளேக் பெர்ரி நிறுவனத்தின் அண்மையக் கால அறிமுகமான பிளேக் பெர்ரி 10 என்ற கைத்தொலைபேசியும் வர்த்தக சந்தையில் போதிய வரவேற்பைப் பெற முடியவில்லை.
எனவே, நிறுவனத்தை மாற்றியமைப்பதன் மூலமும், பணியாட்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலமும், மிகவும் சிறியதாக அதே நேரத்தில் வலிமையான நிறுவனமாக பிளேக் பெர்ரி நிறுவனத்தை உருமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை அதன் நிர்வாகம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.