டிசம்பர் 21 – ஒரு காலத்தில் திறன் பேசிகள் உற்பத்தியில் உலகையே ஒரு கலக்கு கலக்கிய கனடா நாட்டின் பிளேக் பெர்ரி நிறுவனம் 2013ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் அமெரிக்க வெள்ளி 4 பில்லியனுக்கும் மேற்பட்ட நஷ்டத்தை அடைந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் சுமார் 4.3 மில்லியன் பிளேக் பெர்ரி சாதனங்களை மட்டுமே விற்க முடிந்த காரணத்தால் அந்த நிறுவனம் இத்தகைய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது.
நிர்வாகத்தில் தலைமைத்துவ மாற்றம் ஏற்படுத்தப்பட்டும் இத்தகைய நிலைமையை எதிர்நோக்கியுள்ளதால் பிளேக் பெர்ரி நிறுவனத்தின் மறு சீரமைப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது ஜோன் எஸ்.சென் என்பவர் பிளேக் பெர்ரி நிறுவனத்தின் தலைமைச் செயல் முறை அதிகாரியாக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றார்.
தற்போது மொத்த வங்கிக் கையிருப்பாக 3.2 பில்லியன் அமெரிக்க வெள்ளியை மட்டுமே பிளேக் பெர்ரி நிறுவனம் கொண்டுள்ளது. ஆனால், அதன் மற்றொரு வணிகப் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனமோ, மூன்றே மாத காலத்தில் இந்த தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமான தொகையை தனது வங்கிக் கணக்கில் சேர்ப்பித்து வருகின்றது.
பிளேக் பெர்ரி நிறுவனத்திற்கு சாதகமாக உள்ள ஒரே வணிக அம்சம், அந்த நிறுவனத்தின் தகவல் சேவைக்கு (BlackBerry Messenger) 40 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் பதிவு செய்திருப்பதுதான். இந்த செயலியை தங்களின் செல்பேசிக் கருவிகளில் உற்பத்திக் கட்டத்திலேயே பொருத்துவதற்கு ஏறத்தாழ 12க்கும் மேற்பட்ட செல்பேசி உற்பத்தியாளர்களை பிளேக் பெர்ரி ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தைவானின் ஃபோக்ஸ்கோன் நிறுவனத்துடன் இணைந்து புதிய வகை பிளேக் பெர்ரி திறன்பேசிகளை உருவாக்கவும் பிளேக் பெர்ரி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
பிளேக் பெர்ரி நிறுவனம் வணிக ரீதியாக ஆழமாக காலூன்றியுள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனிசியாவில் முதலில் இந்த திறன் பேசிகள் அறிமுகப்படுத்தப்படும்.