புதுடெல்லி, ஆக. 13- உணவு பாதுகாப்பு சட்டம் பற்றி விவாதிக்க அனைத்து மாநில முதல் மந்திரிகள் கூட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஏற்பாடு செய்ய வேண்டும் என குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மோடி தெரிவித்துள்ளதாவது:-
மத்திய அரசு உணவு பாதுகாப்பு தொடர்பாக கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தின் மூலம் ஏழை மக்களின் உணவுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் உணவு பாதுகாப்பு தொடர்பான அடிப்படை நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் அமையவில்லை. செயல்படுத்தவே முடியாத பொறுப்புகள் மத்திய அரசின் மீதும் மாநில அரசுகளின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் பலன் அடைபவர்களின் எண்ணிக்கை சரியான தகுதி அடிப்படையில் முடிவு செய்யப்படவில்லை.
வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு தற்போது மாநில அரசுகளால் மாதந்தோறும் வழங்கப்படும் 35 கிலோ அரிசியை 25 கிலோவாக குறைப்பது எப்படி உணவு பாதுகாப்பு ஆகும்?
எனவே, இதுதொடர்பாக மாநில முதல் மந்திரிகளுடன் விவாதிக்க பிரதமர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.