Home நாடு “வெளியே சுதந்திரமாக சுற்றித்திரியும் குண்டர்களைக் கைது செய்யுங்கள்- அப்பாவி மக்களை அல்ல” – காவல்துறைக்கு அம்பிகா...

“வெளியே சுதந்திரமாக சுற்றித்திரியும் குண்டர்களைக் கைது செய்யுங்கள்- அப்பாவி மக்களை அல்ல” – காவல்துறைக்கு அம்பிகா கண்டனம்

609
0
SHARE
Ad

S Ambigaபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 14 –  ஜோகூரில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் அறையில் பௌத்தர்கள் குழு ஒன்றை வழிபாடு நடத்த அனுமதித்ததற்காக அந்த விடுதி நிர்வாகியை 4 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது குறித்து கருத்துரைத்த பெர்சே இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் (படம்), அண்மை காலமாக நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது இது ஒரு பெரிய விஷயமே அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்லாமியர்களை இழிவு படுத்திவிட்டார் என்று விடுதி நிர்வாகியின் மீது காவல்துறை இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுத்ததற்குப் பதிலாக, நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களை ஒடுக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அம்பிகா கூறியுள்ளார்.

“எத்தனையோ குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டும், கொலை செய்து கொண்டும் இருக்கும் போது, அந்த விடுதி நிர்வாகியை காவல்துறை நடத்தும் விதம் வருத்தமளிக்கிறது. எதற்காக அவரை 4 நாட்கள் காவலில் வைக்க வேண்டும்?” என்றும் அம்பிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஜோகூர் மாநிலம் கோத்தா திங்கியில் உள்ள ஒரு இஸ்லாமியர் தொழுகை நடத்தும் அறையில், சிங்கப்பூரைச் சேர்ந்த பௌத்தர்கள் குழு ஒன்று தியானம் செய்வது போல் உள்ள காணொளி கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி யூடியூப் (Youtube) வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு கடும் சர்ச்சை வெடித்தது.

அவர்களின் செயலுக்கு பௌத்த மஹா விஹாரா ஆலயத்தின் தலைமை பிக்கு கே ஸ்ரீ தம்மரத்னா நாயக்கே மஹா தேரா அனைத்து இஸ்லாமியர்களிடமும் நேற்று மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.