கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – கோலாலம்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற 12 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் உலகின் பல நாடுகளில் இருந்து பல தமிழ் அறிஞர்களும், கணினி தொழில்நுட்ப வல்லுநர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட புத்ரா மலேசியா பல்கலைக்கழகப் பேராசிரியர் நாராயணன் கண்ணன்(படம்) அவர்கள், 12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்து செல்லியலுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் பின்வருமாறு:-
“12 வருடங்களுக்கு முன்பு முதல் தமிழ் இணைய மாநாடு கோலாலம்பூரில் நடைபெற்றது. அப்போது ஒரு கட்டுரையாளராக அதில் பங்கேற்றேன். இப்போது 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதே கோலாலம்பூரில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்”
“இந்த 12 வருட இடைவெளியில் பல்வேறு மாற்றங்கள் இணைய உலகில் நடந்து வருகின்றன. அந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் இப்போது வரும் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. மற்ற மாநாடுகளில் இல்லாத ஒரு சிறப்பு மலேசியாவில் நடைபெறும் மாநாட்டில் என்னவென்றால், ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் பலர் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்”
“ நாம் நினைத்துக் கூட பார்த்திராத வகையில் உலகத்தில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. அதில் செல்லியல் போன்ற செய்தி சேவைகள் உலகில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் கையடக்கக் கருவிகளில் தருவது மிகவும் சிறப்பு. அந்த வகையில், நாம் போகின்ற போக்கில் உலகத்தையே கையில் எடுத்துக்கொண்டு போகிற ஒரு மனநிறைவை கொடுக்கும் இந்தத் தொழில்நுட்பத்திற்கு எனது வாழ்த்துக்கள்” இவ்வாறு பேராசிரியர் நாராயணன் கண்ணன் தெரிவித்தார்.
பேராசிரியரின் முழு நேர்காணலையும் காண கீழ்காணும் காணொளியைப் பயன்படுத்தவும்
– பீனிக்ஸ்தாசன்