Home கலை உலகம் ‘மெட்ராஸ் கபே’ படத்தை தடை செய்ய வேண்டும்: வைகோ அறிக்கை

‘மெட்ராஸ் கபே’ படத்தை தடை செய்ய வேண்டும்: வைகோ அறிக்கை

727
0
SHARE
Ad

vaiko1சென்னை, ஆக. 19– ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசும், செய்த துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்திய அரசும், திட்டமிட்டு, இந்தியாவில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தைப் பயன்படுத்தித் தயாரித்த படம்தான் மெட்ராஸ் கபே எனும் திரைப்படம் ஆகும்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ளவனுமான, கேரளத்தைச் சேர்ந்த ஜான் ஆபிரகாம், ரகசியமாக கொடியவன் மகிந்த ராஜபக்சேயை, இருமுறை சந்தித்து உள்ளான்.

#TamilSchoolmychoice

இலங்கையிலும் படப்பிடிப்பு நடத்தி விட்டு, தற்போது, இல்லை என்று மறுக்கவும் செய்கிறான். இந்தப் படத்தை, சூஜித் சர்கார் என்பவன் இயக்கி உள்ளான். 1987ல், இந்திய அமைதிப்படை, இலங்கைக்குச் சென்றதைப் பின்புலமாகச் சித்தரித்து, இப்படத்தை எடுத்து உள்ளனர்.

madras-cafe-4a_0தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைக் கொடூரமானவர்களாகவும், இந்திய ராணுவத்தினர் பலரை அவர்கள் கொன்றதாகவும், அமைதிப் படை இந்தியா திரும்பிய பின்னர், இந்தியாவின் உளவு நிறுவனமான ரா அமைப்பின் அதிகாரியாக, கேரளத்தைச் சேர்ந்தவனாக, இலங்கைக்கு படத்தின் கதாநாயகன் ஜான் ஆபிரகாம் சென்று, அங்கு உள்ள நிலைமையை அறிவதாகவும், பின்னர் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதாகவும், இப்படம் சித்தரிக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை, பாஸ்கரன் என்ற பெயரில், படத்தில் ஒரு பாத்திரமாக்கி, ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சோனியா காந்தி இயக்குகின்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பெருந்துரோகத்தால், லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த துரோகத்தை மறைக்கவும், கொடியவன் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து உதவவும், இலங்கை இந்திய அரசுகளின் திட்டமிட்ட ஏற்பாடுதான், ஜான் ஆபிரகாமின் மெட்ராஸ் கபே திரைப்படம் ஆகும்.

madras-cafe (1)ஈழத்தமிழர்களுக்குப் பெருங்கேடு செய்த ஜே.என். தீட்சித், இந்திய அரசின் துரோகத்துக்குக் ஆலோசனைகள் கூறிய எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன், கொடியவன் ராஜபக்சேக்கு ஆலோசகரான சுதீஷ் நம்பியார் போல, கேரள மண்ணில் இருந்து மற்றொருவன் ஜான் ஆபிரகாம்.

மெட்ராஸ் கபே திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு, இந்திய அரசும், சிங்கள அரசும், பெருமளவுக்கு உதவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள், லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட போது, நெஞ்சு கொதித்ததால்தான், கொழுந்து விட்டு எரிந்த மரண நெருப்புக்கு, முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்கள், தங்கள் உயிர்களைப் பலியிட்டனர்.

தமிழனுக்கு நீதி கேட்டு நாம் போராடுகிறோம். நீதியை அழிக்க, வல்லாண்மை சக்திகள், வேகமாக வேலை செய்கின்றன. இந்தக் கூட்டுச் சதியை, தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலக நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இப்படம் திரையிடப்பட்டாலும், அங்கு உள்ள தமிழர்கள், தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்ய வேண்டும்.

madras-cafeஆகஸ்டு 23 ஆம் தேதி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திரைப்படத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும்.

இதனை மீறி படம் திரையிடப்பட்டால், மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தடுப்பதற்கு அறப்போர் நடத்திட வேண்டும்!

தமிழகத்தில் திரையிடுவதற்கு, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது; திரை அரங்குகளின் உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என வேண்டுகிறேன். தமிழகத் திரை உலகத்தினர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையிடுவதைத் தடுப்பதற்கு முன்வர வேண்டுகிறேன்.

இதற்கு மேலும் இப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுமானால், அதனைத் தடுப்பதற்கு, திரை அரங்குகளை முற்றுகை இடும் அறப்போரை நடத்துவோம்; கழகக் கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும், ஈழத்தமிழர் உரிமைக்குத் தொடர்ந்து போராடி வருகின்ற தோழர்களும், களமாடிய மாணவர்களும், பெருந்திரளாகப் பங்கு ஏற்குமாறு வேண்டுகிறேன்.”

– இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.