புதுடெல்லி, ஆக.20– டெல்லியில் உணவு பாதுகாப்பு திட்டத்தை சோனியா காந்தி இன்று தொடங்கி வைத்தார்.
நாட்டில் ஏழைகள் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு உணவு பாதுகாப்பு மசோதா கொண்டு வந்துள்ளது. பாராளுமன்றத்தில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட உள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தால் பொது விநியோக திட்டம் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு உள்பட சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உணவு பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் முன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த சட்டத்தை நிறைவேற்ற ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். அதன் பின்பு இன்று பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே ராஜீவ் காந்தி பிறந்த நாளான இன்று டெல்லி மாநில அரசு உணவு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த தொங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா டெல்லி யில் இன்று நடந்த விழாவில் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்–மந்திரி ஷீலா தீட்சித் மற்றும் மாநில மந்திரிகள் கலந்து கொண் டனர்.
அரியானா மாநில காங்கிரஸ் அரசும் இன்று உணவு பாதுகாப்பு திட்டத்தை தொடங்கியது. பானிபட்டில் நடந்த விழாவில் முதல்– மந்திரி புபிந்தர்சிங் ஹோடா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். ராஜீவ் காந்தி பிறந்த நாளான இன்று காங்கிரஸ் ஆளும் 5 மாநிலங்களில் உணவு பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டபோதே அதை முதல் – முறையாக சத்தீஷ்கர் மாநில அரசு சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றியது.