Home கலை உலகம் “ராதிகா மேடத்துடன் பணியாற்றுவது மிகப்பெரிய சவால்” – பப்லு பிரித்திவிராஜுடன் ஓர் அசத்தலான சந்திப்பு!

“ராதிகா மேடத்துடன் பணியாற்றுவது மிகப்பெரிய சவால்” – பப்லு பிரித்திவிராஜுடன் ஓர் அசத்தலான சந்திப்பு!

986
0
SHARE
Ad

Snapshot 1 (8-21-2013 1-17 PM)ஆகஸ்ட் 21 – இப்போதுள்ள காலத்தில் தமிழ் சினிமாவில் ஒருவர் 5 ஆண்டுகள் தாக்குப் பிடிப்பதே மிகவும் கடினமாக இருக்கும் சூழ்நிலையில், கடந்த 1980 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி இன்று வரை கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல வேடங்களில் அதே இளமையுடனும், துடிப்புடனும் நடித்துவரும் ஒரு சிறந்த நடிகர் தான் பப்லு பிரித்திவிராஜ்.

1991 ஆம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான “அழகன்” படத்தில் ஒரு சிறு வேடத்தில் தான் நடித்திருப்பார். ஆனால் அப்போதே பலரின் மனதையும் கொள்ளை கொண்டவர்.

சிவந்த நிறமும், அழகிய முகவெட்டும், வாட்டசாட்டமான உடல்வாகும் கொண்ட அவர் தனது துறுதுறு நடிப்பால் “யார் இந்த அழகிய வாலிபன்” என்று அனைவரையும் கூர்ந்து பார்க்க வைத்தவர்.

#TamilSchoolmychoice

அதன் பிறகு “வானமே எல்லை”,“டைம்”,  “அவள் வருவாளா” போன்ற படங்களில் மூலம் தனது நடிப்பின் இன்னொரு பரிணாமத்தைக் காட்டியவர்.

பல திரைப்படங்களில் நடித்தாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இவர் விட்டு வைக்கவில்லை.

ஜெயா தொலைக்காட்சி வழங்கிய “சவால்”, “லிட்டில் மாஸ்டர்ஸ்” போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளைக் கவர்ந்தவர்.

சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த “வாரணம் ஆயிரம்” படத்தில் நடுநடுங்க வைக்கும் வில்லனாக நடித்து விட்டு, அதற்கு அடுத்ததாக “பயணம்” படத்தில் நகைச்சுவையில் மக்கள் அனைவரையும் ரசிக்க வைத்தவர்.

மலேசிய திரைப்படமான “ழ” வில் கதை, திரைக்கதை எழுதி அதில் கதாநாயகனாகவும் நடித்து மலேசிய சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

தற்போது உலகமெங்கும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் “வாணி ராணி” தொடரில் நடித்துவரும் இவர், அவ்வப்போது விடுமுறை காலங்களில் மலேசியாவில் இருக்கும் தனது நண்பர்களைக் காண வருவது வழக்கம்.

அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் அவரை சந்தித்து செல்லியலுக்காக பிரத்யேக நேர்காணல் ஒன்றை பதிவு செய்தோம்.

வழக்கமாக நான் பிரபலங்களை ஒரு அழகான மாலை வேளையில் சூடான காபியுடன் தான் சந்திப்பது வழக்கம். ஆனால் பிரித்திவி காபி, டீ க்கு தடா சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி  இந்த சந்திப்பு ஒரு மதிய வேளையில் ஒரு அமைதியான இடத்தில் பழச்சாறுடன் ஆரோக்கியமாக அமைந்தது.

அவருடன் கலந்துரையாடிய சில தகவல்கள் இதோ….

Snapshot 3 (8-21-2013 1-18 PM)

செல்லியல்: வணக்கம் பிரித்திவிராஜ்… எப்படி இருக்கீங்க? வாணி ராணி படப்பிடிப்பு எப்படி போய்கிட்டு இருக்கு?

பிரித்திவி: வணக்கம் தாசன்… மலேசிய மக்களுக்கும் எனது வணக்கம்… வாணி ராணி பத்தி சொல்லனும்னா …இப்போ உலகமெங்கும் மிகப் பிரபலமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. முதலில் வாணி ராணியுடைய கதை பற்றிய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போது ராணியுடைய கணவன் ஒரு எதிர்மறையான கதாப்பாத்திரமாகத் தான் சொல்லப்பட்டது. ஆனா அப்புறம் ராதிகா மேடம் தான் பிரித்திவிக்கு இந்த சாமிநாதன் கதாப்பாத்திரம் குடுத்து பாப்போம்னு சொன்னாங்க. எனக்கும் ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கமாத் தான் இருந்தது. காரணம் எதிர்மறையான கதாப்பாத்திரம் தான் நமக்கு செட் ஆகும்னு நெனச்சேன். சாமிநாதன் கதாப்பாத்திரம் ரொம்ப அமைதியானது. இதுவரையில் நான் பண்ணாத ஒரு கதாப்பாத்திரம். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட மேலாக பல நண்பர்கள் எனக்கு முகநூல் வழியாகவும், தொலைப்பேசி மூலமாகவும் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

செல்லியல்: சாமிநாதன் கதாப்பாத்திரம் குறித்து ரசிகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததா?

பிரித்திவி: ஆரம்பத்துல எல்லோரும் ஏன் சார் இப்படி ஒரு அமைதியான கதாப்பாத்திரம் செய்றீங்க? உங்களுக்கு வில்லன் கதாப்பாத்திரம் தான் பொருந்தும். கதையில இப்படியே தான் கடைசி வரைக்கும் நடிப்பீங்களா அல்லது வில்லனா மாறிடுவீங்களான்னு பல கேள்விகள் கேட்டாங்க. இப்போதைக்கு அப்படி ஒரு மாற்றம் இல்லை… அதாவது சாமிநாதன் கதாப்பாத்திரம் அப்படி தான்…ரொம்ப நல்லவர். அறிவுள்ளவர். சந்தர்ப்ப சூழ்நிலையால அவருக்கு எல்லாம் தப்பு தப்பாக நடக்கும்.. அது தான் அவருடைய கதாப்பாத்திரம்.

எனக்கு முகநூல் வட்டாரத்தில் பாத்தீங்கன்னா நண்பர்கள் அதிகம்… அதிலும் குறிப்பாக மலேசியாவில் இருக்கும் நிறைய அழகான பெண்கள் என் நட்பு வட்டாரத்தில் இருக்கிறார்கள். சாமிநாதன் கதாப்பாத்திரம் பண்றதுக்கு முன்னாடி எல்லாரும்  “ஹாய் டியர்”, “ஹாய் சயாங்” என்று தான் கூப்பிடுவார்கள் ஆனா இப்போ பாத்தீங்கன்னா “நீங்க எங்க அங்கிள் மாதிரி இருக்கீங்க”, “டாடி மாதிரி இருக்கீங்க” அப்படின்னு கூப்பிடுறாங்க அதான் எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. (முகத்தை சற்று சோகமாக வைத்துக்கொண்டவர் பிறகு முகம் மலர்ந்து  “சும்மா .. தமாஷுக்கு சொன்னேன்.. என் ரசிகர்கள் அப்படி அழைப்பது எனக்கு பிடித்திருக்கிறது… காரணம் சாமிநாதனுடைய கதாப்பாத்திரம் அப்படி என்று சொன்னார்)

Snapshot 1 (8-21-2013 1-24 PM)

செல்லியல்: ராதிகாவுடன் பணியாற்றுவது எப்படி இருக்கிறது?

பிரித்திவி: ராதிகா மேடம் பத்தி சொல்லனும்னா … அவங்க ஒரு பவர்புல் நடிகை… அவங்களோட ரசிகன் நான்.. நாம சரியா நடிக்கலைன்னா “ஏ…என்னயா இப்படி நடிக்கிற” அப்படின்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிடுவாங்க. அதனால் நாங்க காலையில அவங்க படப்பிடிப்புக்கு வரும் போது அவங்க முகத்த பார்ப்போம். சிரிச்சுக்கிட்டே எல்லாருக்கும் குட் மார்னிங் சொன்னா… அப்பாடா இன்னைக்கு தப்பிச்சோம்னு நெனப்போம்… கொஞ்சம் கோபமா இருந்தா அவ்வளவு தான்….அன்னைக்கு முழுவதும் சின்ன பயத்தோட தான் நடிப்போம்.

ஒருநாள் சரத்குமாரோட சகோதரி வாணி ராணி படப்பிடிப்புக்கு வந்திருந்தாங்க.. எங்க ஒவ்வொருத்தரையா பார்த்து உங்க கதாப்பாத்திரம் நல்லா இருக்குன்னு வாழ்த்து சொன்னாங்க… கடைசியா ராணி கதாப்பாத்திரம் எங்க அப்படின்னு கேட்டாங்க அப்ப ராதிகா மேடம் “நான் தாங்க ராணி” அப்படின்னு சொன்னதும் எங்க எல்லோருக்கும் சிரிப்பு தாங்க முடியல.. அந்த அளவிற்கு வாணி ராணி ரொம்ப சந்தோஷமா போய்கிட்டு இருக்கு.

செல்லியல்: மலேசியாவுடனான நட்பு பற்றி சொல்லுங்க?

பிரித்திவி: மலேசியா எனக்கு ரொம்ப பிடிக்கும்…காரணம் ரொம்ப வருஷமா நான் சினிமாவில நடிச்சிகிட்டு இருக்குறதுனால இந்தியாவில் எங்க போனாலும் ரசிகர்கள் வந்து பாராட்டுவாங்க. போட்டோ எடுத்துக்குவாங்க… இதனால நமக்கு ஒரு தனிமையே இருக்காது. மலேசியாவில் படப்படிப்புக்கு வந்தபோது இங்கு இருக்கும் தமிழர்கள் மிகவும் எதார்த்தமாக நம்முடன் பழகுவது பிடித்தது. இங்க ஒரு மார்டென் நகரமும் இருக்கிறது. பசுமையான காடுகளும் இருக்கிறது. அதே நேரத்தில் ஏதாவது ஒரு சீனர்கள் வாழும் பகுதிக்கோ, மலாய்காரர்கள் வாழும் பகுதிக்கோ சென்றால் என்னை யாருக்கும் தெரியாது. எனக்கு ஒரு தனிமை கிடைத்தது. நானும் ஒரு சாதாரண மனிதனைப் போல் கடைத்தெருவில் சுற்றித் திரிய முடிந்தது.

“ழ” திரைப்படம் உருவான விதம்… தனது சிக்ஸ்பேக் ரகசியம் போன்ற சுவையான தகவல்கள் அடங்கிய பிரித்திவிராஜின் நேர்காணல் நாளை தொடரும்…

– பீனிக்ஸ்தாசன்