Home கலை உலகம் “ஆட்டிசம் மனநோய் அல்ல – குறைபாடு தான்” – பாடகி திலா லக்‌ஷ்மண் விழிப்புணர்வுப் பிரச்சாரம்!

“ஆட்டிசம் மனநோய் அல்ல – குறைபாடு தான்” – பாடகி திலா லக்‌ஷ்மண் விழிப்புணர்வுப் பிரச்சாரம்!

1111
0
SHARE
Ad

11084228_1060772103938908_3383850866339837189_oகோலாலம்பூர், ஏப்ரல் 3 –  “உங்கள் குழந்தை கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கவில்லை; உங்கள் கண்ணைப் பார்த்து பேசவில்லை; மற்ற குழந்தைகளுடன் சகஜமாக விளையாடவில்லை; அப்படியே விளையாடினாலும் காரணமே இல்லாமல் அடிக்கிறது, கிள்ளுகிறது, என்னமோ ஒருவகையில் மற்ற குழந்தைகளிமிருந்து சற்று வித்தியாசப்பட்டே இருப்பதாகத் தெரிந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று தக்க ஆலோசனை பெறுவது நல்லது. காரணம் அது ஆட்டிசம் பாதிப்பாக இருக்கலாம் என்கிறது மருத்துவம்.

ஆட்டிசம் பாதிப்புகள் உறுதியானால் என்னமோ ஏதோவென்று பதறவும் வேண்டாம். காரணம், எல்லோரும் பயப்படுவது போல் ஆட்டிசம் என்பது ஒரு மன நோய் அல்ல. இதை ‘Spectral Disorder’ என்கிறது மருத்துவம். மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட  ஒரு குறைபாடு தான். இந்த குறைப்பாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை அளித்தால் நிச்சயமாக உங்கள் குழந்தையை அதிலிருந்து மீட்டு மற்ற குழந்தைகளைப் போல இயல்பாக வளர்க்கலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்நிலையில், உலக ஆட்டிசம் தினமான நேற்று உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு பேரணிகளும், கருத்தரங்குகளும் நடைபெற்றுள்ள வேளையில் மலேசியாவின் புகழ்பெற்ற பாடகியும், ‘Pertubuhan Sayang Autisme Malaysia- PERSAMA’ என்ற அரசு சாரா இயக்கத்தின் நிறுவனமான திலா லக்‌ஷ்மண் ஏற்பாட்டில், பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தலைமைவகிக்க ஆட்டிசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் தலைநகர் பெர்ஜாயா டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

#TamilSchoolmychoice

முன்னதாக இதே பிரச்சாரம் காலையில், ஆர்டிஎம் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

11105974_1060782550604530_1011753322_o

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தமிழகத்தின் பிரபல நடிகர் பப்லூ பிரித்திவிராஜ் மற்றும் நடிகர் சிகே, நடிகை ஷைலா நாயர், நடிகர் சசி அப்பாஸ் உள்ளிட்ட பிரபல மலேசிய நட்சத்திரங்களும், முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.

LIUBA (LIGHT IT UP BLUE FOR AUTISM AWARENESS) என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் நீல நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர். நீல நிறத்தில் மெழுவர்த்திகள் ஏந்தியும் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

11054476_733062956813922_5461675924963107262_nஇந்நிகழ்ச்சி குறித்து திலா லக்‌ஷ்மண் செல்லியலுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“ஆட்டிசம் என்றால் மனநோய் அல்ல ஒரு குறைபாடு தான் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகம் இருக்கின்றது. மலேசியாவைப் பொறுத்தவரை இப்போது தான் மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். எயிட்ஸ் போன்ற நோய்களுக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரங்களால் மக்கள் ஓரளவிற்கு அதைப் பற்றி விழிப்புணர்வோடு உள்ளனர். ஆனால் ஆட்டிசம் போன்ற குறைப்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ள இன்னும் அதிகமான பிரச்சாரங்கள் தேவை. மார்பகப் புற்றுநோய் பிரச்சாரத்திற்கு பிங்க் நிறத்தை பயன்படுத்துகின்றார்கள். காரணம் மென்மையின் தன்மையை உணர்த்த அந்த நிறம் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோல் ஆட்டிசத்திற்கு அமைதி, சாந்தம் ஆகியவற்றை குறிக்க நீல நிறம் பயன்படுத்தப்படுகின்றது.”

“இப்படி ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற யோசனை வந்த போது எனது பாட்னர் ஷான் மற்றும் நண்பர்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். டான்ஸ்ரீ கேவியஸ் அவர்களை அழைத்த போது மறுக்காமல் வந்து நிகழ்ச்சி முடியும் வரை கலந்து கொண்டார். ஷைலா நாயர் இந்த பிரச்சாரத்திற்கு ஆலோசகராக செயல்பட்டு அனைத்து உதவிகளையும் செய்தார். பிரித்திவிராஜ் மிகவும் அன்பான நண்பர். ஆட்டிசம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யப் போகிறோம் என்று சொன்னேன். எனக்கு அத்தனை ஊக்கமும் ஒத்துழைப்பும் அளித்தார்.”

“மேலும், இந்த பிரச்சாரத்திற்கு 20,000 ரிங்கிட் நிதியுதவி செய்த ஏஎல்சி (ALC) கல்லூரிக்கும், மற்ற வசதிகளுக்கு ஸ்பான்சர் செய்த ஸ்கொயர் ஹோட்டல் நிர்வாகத்திற்கும் நான் இந்த நேரத்தில் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன். அதேவேளையில், அஸ்ட்ரோ, டிஎச்ஆர், மின்னல் எப்எம், தமிழ் நாளிதழ்கள், கலையுலகம் என இந்நிகழ்வுக்கு ஆதரவு அளித்த அனைத்து ஊடகங்களுக்கும் எனது நன்றிகள்” இவ்வாறு திலா லக்‌ஷ்மண் கூறினார்.

மேலும், “மலேசியாவைப் பொறுத்தவரையில் இது போன்ற ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை கவனிக்கவும், தகுந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கவும் அரசாங்கம் சார்பில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன என்ற கேள்விக்குப் பதிலளித்த திலா லக்‌ஷ்மண், “மலேசியாவில் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை பராமரிக்க அரசாங்க மையங்கள் இருந்தாலும், அங்கு குழந்தைகளுக்கு சரியான முறையில் பயிற்சி அளிக்க போதிய பயிற்சியாளர்கள் இல்லை. அப்படிப்பட்ட குழந்தைகள் சில நேரம் மிகவும் கோபமாக இருப்பார்கள், இல்லை சோர்ந்து இருப்பார்கள். அவர்களின் மனநிலைக்குத் தகுந்தார் போல் கவனிக்க வேண்டும். அதனால் தான் நான் என் மகனுக்கு தனியார் மையங்களில் பயிற்சி அளிக்கின்றேன். எனவே அரசாங்க மையங்களிலும் ஆட்டிசம் குழந்தைகளைப் பராமரிக்க திறமையான பயிற்சியாளர்கள் தேவை” என்றார்.

திலா லக்‌ஷ்மண் கடந்த ஆண்டு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிதியுதவிக்காக ‘ஜனனம்’ என்ற தனிப்பாடலை ஒன்றையும் வெளியிட்டார். மலேசியாவில் ஆட்டிசம் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட முதல் பாடல் ‘ஜனனம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டிசத்திற்காக தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருபவர்களில் நடிகர் பிரித்திவிராஜும் ஒருவர். தமிழகத்தில் ‘WE CAN’ என்ற அரசு சாரா அமைப்பின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி, உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.

11086509_1060782557271196_1099457641_o

கடந்த வருடம் ‘WE CAN’ அமைப்பு மூலம் சென்னையில் பிரபலமான வணிக வளாகம் ஒன்றில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்விற்காக ‘Flash Mob’ ஒன்றை பிரித்திவிராஜ் நடத்தினார். அதை செல்லியல் நேரடியாகப் பதிவு செய்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

“ஆட்டிசம் குறைபாடு என்பது ‘Spectral Disorder’ என்று கூறுவார்கள். இந்த குறைபாடு ஆரம்ப நிலையில் இருந்தாலும், தீவிர நிலையில் இருந்தாலும், இது ஒரு நோய் அல்ல. மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறைபாடு தான். என் மகனுக்கு இந்த குறைபாடு தீவிரமாக இருந்தது. ஆனால் சரியாக கவனிக்கப்பட்டதன் மூலம் இன்று நல்ல நிலையில் இருக்கிறார். என் மகன் மிகச் சிறந்த அறிவாளி.  நடனம் ஆடுவார், பாடல் கேட்பார், டிவி பார்பார் மற்ற குழந்தைகளை போல் மிக இயல்பாக இருப்பார்.” என்கிறார் பிரித்திவிராஜ்.

உலக அளவில் வளர்ந்த நாடுகளில் 68 குழந்தைகளில் 1 குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதாகவும், பெரும்பாலும் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் தான் ஆட்டிசத்தால் பாதிக்கப்படுவதாகவும் அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

மலேசியாவில் 600 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசத்துடன் பிறப்பதாகவும், நாடெங்கிலும் 47,000 பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து பராமரிக்கும் தேசிய அளவிலான முதல் ஆட்டிசம் மையம் எதிர்வரும் மே மாதத்திற்குள் (2015) அமைக்கப்படும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் கடந்த ஆண்டு உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் சொல்வது என்னவென்றால், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனிமைப்படுத்தாமல், அவர்கள் மீது வெறுப்பை காட்டாமல் அதற்கான மருத்துவ சிகிச்சைகளையும், சிறப்புப் பயிற்சிகளையும் அளித்தால் அக்குழந்தைகளையும் சாதனையாளர்களாக்கலாம்!

செய்தி -ஃபீனிக்ஸ்தாசன்

படங்கள்: எஸ்பி பிரபா