Home கலை உலகம் நடிகர் பிரித்திவிராஜ் சந்திப்பு பகுதி 2: “நான் சினிமாவுக்கு வந்து 42 வருஷம் ஆச்சு”

நடிகர் பிரித்திவிராஜ் சந்திப்பு பகுதி 2: “நான் சினிமாவுக்கு வந்து 42 வருஷம் ஆச்சு”

1088
0
SHARE
Ad

ஆகஸ்ட் 22 –  பிரபல நடிகர் பப்லு பிரித்திவிராஜுடனான நேர்காணல் இரண்டாம் பகுதி…

Snapshot 4 (8-23-2013 12-04 AM)செல்லியல்: “ழ” திரைப்படம் உருவான விதம்?

பிரித்திவி : மலேசியாவுல பாத்தீங்கன்னா நிறைய திறமை வாய்ந்தவங்க இருக்காங்க. இந்தியாவுல இருக்குற அதே அளவிற்கு மலேசியாலையும் கலைஞர்கள் இருக்காங்க. அவங்களுக்கு ஆடுற திறமை, பாடுற திறமை, நடிப்புத் திறமைன்னு எல்லா திறமைகளும் இருக்கு. அவங்களுடைய திறமைகள் வெளியுலகிற்கு தெரிய வேண்டும் என்று நினைத்தேன். அப்படி ஒருநாள் அறிமுகமான நண்பர் தான் ஆலன்.

#TamilSchoolmychoice

அவரும் நானும் சேர்ந்து ஒரு கதை பண்ணலாம்னு முடிவெடுத்தோம். இந்தியால இருக்குற திறமைசாலிகளை இங்கே காட்டுவது அதே நேரத்தில் இங்குள்ள திறமைசாலிகளை அங்கே காட்டுவது என்று முடிவெடுத்தோம்.இன்னைக்கு தமிழ் படம்னு சொன்னா அது தமிழ் நாட்டுல இருந்து வர படங்களா தான் இருக்கு. ஆனால் அந்த நிலையை மாற்றி உலகத்தில் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்காங்களோ அங்கிருந்து எல்லாம் தமிழ் படங்கள் வெளிவரவேண்டும் அப்படி ஒரு கனவோடு தான் இந்த “ழ” திரைப்படத்தை உருவாக்கினோம்.

ஆனால் இந்த  “ழா” திரைப்படத்தை இங்கே வெளியிடுவதில் பல சிக்கல்கள் இருந்தன. அதைப் பற்றி இங்கே பேச வேண்டாம். பல போராட்டங்களுக்கு மத்தியில் படத்தை மலேசியாவில் வெளியிட்டோம். “ழ” திரைப்படம் இன்னும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. அதற்கான முயற்சிகள் செய்து வருகிறேன். விரைவில் அங்கே வெளியிடுவேன்.

Snapshot 8 (8-21-2013 1-19 PM)செல்லியல்: “ழ” என்று பெயர் வைத்ததற்குக் காரணம்?

பிரித்திவி: “ழ” அப்படின்னு ஏன் இந்த படத்துக்கு பெயர் வைச்சீங்க? இதுக்கும் அந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? என்று நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள். ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால பாத்தீங்கன்னா இந்தியாவுல ஏதாவது ஒரு இங்கிலீஷ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியலையன்னா மலேசியாவுக்கு தான் போன் செய்து கேட்போம். அந்த அளவிற்கு மலேசியாவில் தமிழ் மிக வலுவாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் மக்கள் அவங்களோட பிள்ளைகளை சீன பள்ளிகளிலும், மலாய் பள்ளிகளிலும் படிக்க வைத்து தமிழ் உச்சரிப்புக்கள் மாறத்தொடங்கியது.

“ழ” என்ற எழுத்தை சரியான உச்சரிப்போடு நிறைய பேர் சொல்வதில்லை. அப்போது இந்த கதைக்கு ஒரு நல்ல கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்தோம். காரணம் இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதை. அந்த கதாநாயகி அழகாகவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் தமிழை சரியாக உச்சரிக்கவும் வேண்டும்.

அப்படி ஒரு கதாநாயகியை தேடிக் கொண்டிருந்த போது தான் சங்கீதா கிடைத்தார். “ழ” என்ற வார்த்தையை தெளிவாக உச்சரித்த காரணத்திற்காகவே அவரை தேர்வு செய்தோம். சங்கீதா மலேசிய திரைநட்சத்திரங்களில் மிகவும் திறைமைவாய்ந்த ஒரு பெண் என்று தான் சொல்லுவேன். அவருக்கு திரையுலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

Snapshot 3 (8-23-2013 12-03 AM)செல்லியல்: இங்கே உள்ள கலைஞர்களுடனும், அங்குள்ள கலைஞர்களுடனும் பணிபுரிந்த அனுபவம் பற்றி?

பிரித்திவி: இந்தியாவில் இருக்கும் அதே அளவு திறமை இங்குள்ள கலைஞர்களுக்கும் இருக்கிறது. “லைப் ஆப் பை” என்ற திரைப்படத்தில் மலேசிய தொழில்நுட்பக் கலைஞர்கள் தான் பணிபுரிந்திருக்கிறார்கள். அப்படத்தில் கிராபிக்ஸ் அட்டகாசமாக இருந்தது.

பொதுவாக சினிமாவில் கடின உழைப்பு தேவை. தொழிநுட்பக் கலைஞர்கள் தொடங்கி, தயாரிப்பாளர் வரை அனைவரும் மிகக் கடினமாக உழைக்க வேண்டும். அப்போது தான் அந்த படத்தை ஒரு வெற்றிப்படமாக ஆக்க முடியும். அதைப் பார்த்து தான் இன்னும் பத்து பேர் படம் பண்ணலாம் என்று வருவார்கள். ஆனால் ஒரு படம் தோல்வியடையும் பட்சத்தில் அது எல்லோருக்குமே ஒரு பெரும் இழப்பாக இருக்கும்.

அதனால் நான் என்ன சொல்றேன்னா… மலேசியாவில் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த சினிமாவை முழு நேரமாக செய்வதில்லை. அவர்கள் அதை முழு நேர பணியாகச் செய்ய வேண்டும் அப்போது தான் மலேசியா சினிமா இன்னும் பெரிதாக வளரும்.

செல்லியல்: இதுவரை தமிழ் சினிமாவில் நீங்கள் கடந்து வந்த பாதை?

பிரித்திவி: (முகத்தில் அழகான ஒரு புன்னகையுடன்) நான் சினிமாவுக்கு வந்து 42 வருஷம் ஆச்சு. எனக்கு இப்போ 47 வயசு.. (தனது உண்மையான வயதை மறைக்காமல் வெளிப்படையாக சொன்ன நடிகர்கள் வெகு சிலரே)  நான் ஒரு ஐந்து ஆறு வயதில் நடிக்கத் தொடங்கினேன். குழந்தை நடசத்திரமாக ஒரு 68 படம், வளர்ந்த பிறகு ஒரு 106 படம் …அப்படி இப்படின்னு 200 படங்களுக்கு மேல் செய்திருக்கிறேன். அதுமட்டுமில்லாம நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகங்கள்னு செய்திருக்கேன்.

சில நேரங்களில் வாய்ப்புகள் இன்றி வீட்டில் இருக்கும் போது சரி சினிமா இனி நமக்கு வேண்டாம் என்று முடிவெடுத்து துபாய் போன்ற நாடுகளுக்கு செல்லலாம் என்று முடிவெடுப்பேன். அப்பத்தான் மறுபடியும் ஏதாவது ஒரு வாய்ப்பு வரும் அப்படியே எல்லாத்தையும் உதறிவிட்டு மீண்டு சினிமாவிற்கு வந்துவிடுவேன். இப்படி தான் என்னுடைய சினிமா வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது.

செல்லியல்: அழகனில் பார்த்த அதே அழகுடனும், இளமையுடனும் பிரித்திவி இருப்பதன் ரகசியம் என்ன?

பிரித்திவி: நான் புகைப்பிடிக்க மாட்டேன்… மது அருந்த மாட்டேன்… அதிக எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்ள மாட்டேன்.. இனிப்பு கிடையவே கிடையாது…கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுவேன்.. (அவர் சொல்ல சொல்ல லேசாக நமக்கு தலை சுற்றுகிறது… இளமையை பாதுகாக்க இத்தனை தியாகம் செய்ய வேண்டுமா?) நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதை வைத்து தான் உங்களுடைய தோல் இருக்கும். என் கூட பல வருடங்களுக்கு முன் நடித்த நடிகர்கள் எல்லாம் இப்போ எனக்கு அப்பா மாதிரி, தாத்தா மாதிரி ஆகிட்டாங்க.. எனக்கு 47 வயது ஆனால் இந்த வயசிலும் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறேன்…

இது நான் மட்டும் இல்ல… எல்லோருமே இதை பின்பற்றலாம்… ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்…நல்ல தூக்கம் வேண்டும்.. மனதில் என்ன கவலைகள் இருந்தாலும் அதை மறந்து விட்டு தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .. அப்படி இருந்தால் நீங்களும் எப்போதும் இளமையாக இருக்கலாம்… வயது என்பது வெறும் நம்பர் தான்…எப்போதும் சந்தோஷமாக இருங்க…நன்றி

பிரித்திவியுடன் பேசிக்கொண்டிருக்கையில் நமக்கும் அவரது துறுதுறுப்பு ஒட்டிக்கொண்டு விட்டது போல் உணர்வு ஏற்பட்டது. அதற்குள் அவருக்கு பல தொலைப்பேசி அழைப்புக்கள் வந்துவிட்டன…இருந்தாலும் செல்லியலுக்காக தனது நேரத்தை ஒதுக்கி மிகவும் பொறுமையாக நேர்காணல் அளித்தார்.

உலகமே அறிந்த ஒரு நடிகராக இருந்தாலும் எந்த ஒரு தலைக்கணமும் இன்றி அனைவரிடமும் அன்பாகவும், நட்பாகவும் பேசும் ஒரு மனம் இருப்பதால் தான் பிரித்திவியை எல்லோருக்கும் பிடிக்கிறது. அவர் மென்மேலும் வளர செல்லியல் சார்பாக எமது வாழ்த்துக்களைக் கூறிவிட்டு திரும்பினோம்….

 -பீனிக்ஸ்தாசன்