கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – எதிர்வரும் ம.இ.கா தேர்தலில் தனது தேசிய உதவித் தலைவர் பதவிக்கு நிச்சயமாக அனைத்து பேராளர்களின் ஆதரவோடு போட்டியிடுவேன் என்று ம.இ.கா நடப்பு தேசிய உதவித்தலைவரும், பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகருமான டத்தோ எஸ்.கே தேவமணி தெரிவித்துள்ளார்.
இன்று காலை ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தேவமணி, “ அனைத்து பேராளர்களின் ஆதரவோடு நிச்சயமாக நான் மீண்டும் உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன். கட்சியில் தொடர்ந்து அமைதி நிலவவும், தொலைநோக்குப் பார்வையுடனும் பிரதமருடனான சந்திப்பு நிகழ்ந்தது. தொகுதி ரீதியிலும், மாநில ரீதியிலும் கட்சியில் அமைதி நிலவுவது மிக முக்கியம்”
“நமது இந்திய சமூதாயத்தின் ஆதரவை வலுப்படுத்த வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். கட்சியின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உதவித்தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். இப்போது ஒற்றுமையாக எடுத்திருக்கும் இந்த முடிவு மிகச் சிறப்பான ஒன்று என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், போட்டியின்றி தேசியத் தலைவர்கள் தேர்ந்தெடுப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தேவமணி, “கட்சி கட்டுக்கோப்பாக இருப்பதற்கு இந்த ஒற்றுமை மிக முக்கியம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில் அக்கட்சியின் நடப்பு தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுக்கும், துணை தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள சமாதான உடன்படிக்கை குறித்து விளக்கமளிப்புக் கூட்டம் இன்று காலை ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
– பீனிக்ஸ்தாசன்