Home அரசியல் “எனக்கு திறமை இருக்கிறது – தேசிய உதவித்தலைவர் பதவிக்கு கட்டாயம் போட்டியிடுவேன்” – வேள்பாரி

“எனக்கு திறமை இருக்கிறது – தேசிய உதவித்தலைவர் பதவிக்கு கட்டாயம் போட்டியிடுவேன்” – வேள்பாரி

631
0
SHARE
Ad

Snapshot 1 (23-08-2013 11-42 AM)கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 –  எதிர்வரும் ம.இ.கா தேர்தலில் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு கட்டாயமாக போட்டியிடுவேன் என்று ம.இ.கா கட்சியின் வியூக இயக்குனரும், முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவர் உத்தாமா சாமிவேலுவின் மகனுமான எஸ்.வேள்பாரி தெரிவித்துள்ளார்.

நேற்று காலை ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வேள்பாரி, “நான் உதவித்தலைவர் பதவிக்கு கட்டாயமாக போட்டியிடுகிறேன். போட்டியென்று வந்துவிட்டால் கண்டிப்பாக போட்டியிட்டுத் தான் ஆக வேண்டும். அது 3 பேர் நிற்கிறார்களோ, 5 பேர் நிற்கிறார்களோ பிரச்சனை இல்லை. எனக்கு திறமை இருக்கிறது. ம.இ.கா பேராளர்களின் ஆதரவு இருக்கிறது. அந்த வகையில் போட்டியிடுவது நிச்சயம் தான்” என்று தெரிவித்தார்.

மேலும், போட்டியின்றி தேசியத் தலைவர்கள் தேர்ந்தெடுப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த வேள்பாரி, “அது கட்சியின் ஒற்றுமையப் பொறுத்து இருக்கிறது. காரணம் அடுத்த பொதுத்தேர்தலுக்குள் கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்தி இந்திய மக்களின் ஆதரவைப் பெற வேண்டும். போட்டியென்று வைத்து கட்சிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடாது. இன்று ம.இ.காவில் அனைவரும் கலந்தாலோசித்து எடுத்திருக்கும் இந்த முடிவு சிறந்த ஒன்று” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில் அக்கட்சியின் நடப்பு தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுக்கும், துணை தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள சமாதான உடன்படிக்கை குறித்து விளக்கமளிப்புக் கூட்டம் இன்று காலை ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

– பீனிக்ஸ்தாசன்