ஷா ஆலம், ஆகஸ்ட் 26 – ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கை தொடர்ந்து செயல்படும். குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களது தவறுக்கு வருந்தி காலம் கடக்கும் முன்பே திருந்திக்கொள்வது நல்லது என்று சிலாங்கூர் மாநில நடப்பு காவல்துறைத் துணை ஆணையரான ஏ.தெய்வீகன் கூறியுள்ளார்.
மேலும், சிலாங்கூர் மாநில ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கைக்கு எந்த ஒரு நேரமும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும், குண்டர்களை ஒழிக்க எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெய்வீகன் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, குற்றவாளிகள் தங்களது தவறுகளை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்பு கேட்டு திருந்தி வாழவேண்டும் என்றும் தெய்வீகன் வலியுறுத்தியுள்ளார்.
“காலம் கடக்கும் முன்பே தவறுக்காக வருந்திவிடுங்கள்.ஒருவேளை உங்களது குடும்பத்தினர் மற்றவர்களால் தாக்கப்பட்டாலோ அல்லது சுடப்பட்டாலோ உங்களது மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எனவே வீட்டிற்குப் போய் கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்” என்று குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு தெய்வீகன் அறிவுரை கூறியுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 100 க்கும் மேற்ப்பட்ட குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காரணம் கடந்த சில மாதங்களில் மட்டும் சிலாங்கூரில் குண்டர் கும்பல் சண்டை மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன.