Home நாடு பினாங்கு மாநிலக் காவல் துறைத் தலைவராக தெய்வீகன் பொறுப்பேற்கிறார்!

பினாங்கு மாநிலக் காவல் துறைத் தலைவராக தெய்வீகன் பொறுப்பேற்கிறார்!

1509
0
SHARE
Ad

Deiveegan-policeகோலாலம்பூர் – காவல் துறை ஆணையரும், தற்போது புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின் துணைத் தலைவருமான டத்தோ ஏ.தெய்வீகன் (படம்) பதவி உயர்வு பெற்று, பினாங்கு மாநிலத்திற்கான காவல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.

எதிர்வரும் டிசம்பர் 31 முதல் இந்தப் புதிய பதவியை தெய்வீகன் ஏற்கவிருக்கிறார்.

தற்போது பினாங்கு மாநிலத்தின் காவல் துறைத் தலைவராக இருக்கும் சுவா கீ லாய், 60 வயது நிறைவடைந்து பதவி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு தெய்வீகன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, பினாங்கு மாநிலத்தின் காவல் துறை துணைத் தலைவராக 2013 முதல் மூன்று ஆண்டுகளுக்கு பொறுப்பு வகித்த அனுபவத்தைக் கொண்ட தெய்வீகன், சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.

58 வயதான தெய்வீகன், காவல் துறை பணிகளுக்கிடையில் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தன்முனைப்புத் தூண்டல் உரைகளையும், வழிகாட்டுதல் பணிகளையும் தொடர்ந்து ஆற்றி வருகிறார்.

தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட தெய்வீகன் தனது பரபரப்பான காவல் துறைப் பணிகளுக்கு இடையில் இலக்கிய, மொழி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவ்வப்போது திறனாய்வுகள் வழங்குவதிலும் ஈடுபாடு கொண்டவர்.

தற்போது மத்திய வணிகக் குற்றவியல் பிரிவில் புலனாய்வுத் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

ஈப்போவை பூர்வீகமாகக் கொண்ட தெய்வீகன் மலாயாப் பல்கலைக் கழகத்தின் பட்டதாரியாவார். பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தமிழ் மொழி சம்பந்தப்பட்ட துறைகளில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டிய தெய்வீகன், பல்கலைக் கழகப் படிப்பு முடிந்ததும், தனது 27-வது வயதில், காவல் துறைப் பணியில் இணைந்தார்.

அதன் பின்னர் பல்வேறு காவல் துறைப் பயிற்சிகளைப் பெற்றதோடு, பல்வேறு மாநிலங்களில், பலதரப்பட்ட பொறுப்புகளில் பணியாற்றியிருக்கின்றார்.

செந்துல் காவல் நிலையத்தின் தலைவராக சுமார் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அவர், கெடா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர்.

வணிகக் குற்றவியல் பிரிவுகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர் தெய்வீகன்.