Home உலகம் எந்த நேரத்திலும் சிரியாவைத் தாக்க அமெரிக்கா தயாராகின்றது!

எந்த நேரத்திலும் சிரியாவைத் தாக்க அமெரிக்கா தயாராகின்றது!

699
0
SHARE
Ad

Syria-plane-attack-featureஆகஸ்ட் 31 – சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ரசாயனத் தாக்குதலைப் பற்றி ஆராய்வதற்கு வருகை தந்த ஐக்கிய நாட்டு (ஐநா) சபையின் ஆயுத நிபுணக் குழுவினர் அந்த நாட்டை விட்டு, வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து, எந்த நேரத்திலும் சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகின்றது என செய்தி நிறுவனங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

#TamilSchoolmychoice

சிரியாவைச் சுற்றியுள்ள வட்டாரத்தில் ஐந்து ஏவுகணை அழிப்பு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் அமெரிக்கா, ஒரு குறிப்பிட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை மேற்கொள்ளும் என அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா அறிவித்துள்ளார்.

மனித நேயமற்ற, கொடூரத் தாக்குதலை மேற்கொண்டுள்ள சிரியாவுக்கு பதிலடி கொடுக்கும் முன்னேற்பாடுகளில் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கெர்ரி, முக்கிய ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐநா ஆயுத நிபுணர்கள் சிரியாவிலிருந்து வெளியேறினர்

இதற்கிடையில் சிரியாவுக்குள் ஆய்வை மேற்கொள்ள வந்திருந்த ஐநா ஆயுத நிபுணக்  குழுவினர், சிரியாவிலிருந்து தரை வழியாக லெபனான் வந்து சேர்ந்துள்ளனர். தாக்குதல் நடந்ததாக  சந்தேகிக்கப்படும் சிரியா பகுதிகளுக்கு வருகை தந்து, அங்கு இரத்தம், மண், மனித உடல் சிதறல்கள் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்துள்ள ஆய்வுக் குழுவினரில் 20 பேர் இடம் பெற்றுள்ளனர். இராசயன ஆயுத நிபுணர்களும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த மாதிரிகள் இனி, விஞ்ஞானக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு இராசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து ஆராயப்படும். ஆய்வு முடிவுகள் வெளிவருவதற்கு ஏறத்தாழ இரண்டு வாரங்கள் ஆகலாம் என ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூன் ஐநா பாதுகாப்பு மன்ற உறுப்பிய நாடுகளிடம் தெரிவித்துள்ளார்.

M_Id_395146_John_Kerryஅசாட் தலைமையிலான சிரியா அரசாங்கத் துருப்புக்களின் தாக்குதலால் 1,429 பொதுமக்கள் இறந்துள்ளதாக அமெரிக்கா தான் சொந்தமாக துப்பறிந்து கண்டுபிடித்த விவரங்களில் தெரிய வந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோர் கெர்ரி (படம்) குறிப்பிட்டுள்ளார்.

“பாஷார் அல் அசாட் போன்ற கொடூரமான, கொலைகாரத் தலைவர்கள் தங்களின் சொந்த மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிப்பதை, நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுக்கும் ஹெஸ்புல்லா போன்ற அமைப்புக்களுக்கும் இது ஒரு முன்னுதாரணமாகிவிடும்” என்றும் கெர்ரி கடுமையாக சாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா எந்த நேரத்திலும் சிரியா மீது நடத்தப் போகும் தாக்குதலை உலகமே கவனமுடனும், ஆவலுடனும் பார்த்துக் கொண்டிருக்கின்றது.