கோலாலம்பூர், செப்டம்பர் 2 – கோலாலம்பூர் மாநகராட்சி சபை (டிபிகேஎல்) ஜாலான் பி ரம்லியில் அமைந்துள்ள 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலின் சுவர் நிறுவும் பணியின் போது அதைத் தடுத்து நிறுத்த முயன்ற 10 பேரை நேற்று காவல்துறை கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர்களில் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் டி.மோகன், பிகேஆர் போராளி எஸ்.ஜெயதாஸ் ஆகிய முக்கியப் பிரமுகர்களும் அடங்குவர். அதோடு தங்க முக்கோண முனீஸ்வரர் ஆலயத்தின் இரண்டு பிரதிநிதிகளும் கைது செய்யப்பட்டனர்
மேலும், மஇகா இளைஞர் பிரிவைச் சேர்ந்த சில உறுப்பினர்களும், பிகேஆர் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என் சுரேந்திரனுடைய உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைமையகத்தில் நேற்று தடுத்து வைக்கப்பட்டனர்.
ஆனால் இந்த கட்டுமானப் பணிக்கு ஆட்சேபனை தெரிவித்தாலும், இது அரசாங்கம் எடுத்த முடிவு என்பதால் மீண்டும் கட்டுமானப் பணி தொடரும் என்று கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் தெங்கு அட்னானின் உதவியாளர் ஆர் ரமணன் தெரிவித்தார்.
மேலும், இது கோவிலை உடைக்கும் பணி அல்ல என்று கூறிய ரமணன், அரசாங்கம் Hap Seng Consolidated Bhd என்ற நிறுவனத்திற்கு வழங்கிய 8 அடி அகல நிலத்திற்கு ஒரு எல்லையாக இந்த சுவர் இருக்கும் என்பதை ரமணன் விளக்கினார்.
தற்போது அந்த கோயில் அரசாங்க நிலத்திற்குள் சற்று ஊடுருவியுள்ளதையும் ரமணன் குறிப்பிட்டார்.
கோவிலை இடிப்பதாக தவறாகப் புரிந்து கொண்டனர்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கோவிலின் நடைபாதையை சீர் படுத்துவதற்காக தற்காலிகமாக அங்கிருந்த சில சிலைகள் அகற்றப்பட்டன என்றும், அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து டாங் வாங்கி காவல்துறைத் தலைமையகத்தின் துணை ஆணையர் ஸைனுடின் அஹமட் கூறுகையில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தின் வேலைகள் முடிந்ததும் அகற்றப்பட்ட சிலைகள் மீண்டும் இருந்த இடத்திலேயே வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், “மஇகா இளைஞர் பிரிவுக்கும், டிபிகேஎல் லுக்கும் இடையில் தவறான புரிந்து கொள்ளுதல் தான் இந்த பிரச்சனைக்குக் காரணம். கோயிலை டிபிகேஎல் உடைக்கப் போவதாக மஇகா இளைஞர் பிரிவு புரிந்து கொண்டுவிட்டது” என்று ஸைனுடின் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று பிற்பகல் வாக்குமூலம் பெற்ற பிறகு விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.