Home அரசியல் “டத்தோஸ்ரீ பழனிவேலுவின் வெற்றிக்கு வாழ்த்துகள்” – சேவியர் ஜெயக்குமார்

“டத்தோஸ்ரீ பழனிவேலுவின் வெற்றிக்கு வாழ்த்துகள்” – சேவியர் ஜெயக்குமார்

683
0
SHARE
Ad

xavierகோலாலம்பூர், செப்டம்பர் 3 – ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த சேவியர் ஜெயக்குமார், எப்பிங்கம் தமிழ்ப் பள்ளியின் 3 ஏக்கர் நிலத்தை ம.இ.கா திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து சேவியர் ஜெயக்குமார் பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

டத்தோஸ்ரீ பழனிவேலுவின்  வெற்றிக்கு வாழ்த்துகள்

#TamilSchoolmychoice

“நேற்று நடைபெற்ற ம.இ.காவின்  தேசியத் தலைவருக்கான வேட்புமனு தாக்கலின் போது போட்டியின்றி ம.இ.காவின் தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட  டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு எனது வாழ்த்துகள்.இந்தியச் சமுதாயம்  எல்லாவற்றிலும்  தோல்விக்கண்டு நிற்கும்  இவ்வேளையில், சமுதாய வெற்றிக்குப் பாடுபட வேண்டியவர்கள் பொன்னான காலத்தைச் சச்சரவுகளில் ஈடுபட்டு வீணாக்கக் கூடாது”

“அவரின் வெற்றிக்குப்பின்  ஆற்றிய உரையில் ம.இ.காவின்  சொத்துகளைப் பட்டியலிட்டிருந்தார். ஆக, ம.இ.காவுக்கு இருக்கும் சொத்துகளே போதுமானது. கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ள சொத்துபறிப்பு, சுரண்டல் கொள்கைகளுக்கு எல்லா வட்டத்திலும் விடை கொடுக்கப்பட வேண்டும். அதனை ம.இ.கா தலைவர் தேசிய நிலையிலிருந்து தொடக்கி வைத்தால் கட்சிக்கு நன்மை”

“தனி மனிதனிடமோ, சமுதாயத்திடமோ  இருந்து எடுத்ததைத் திரும்பிக் கொடுப்பதன் வழி, நீண்டக்கால  நோக்கில் சமுதாயத்தின் நன்மதிப்பைச் சம்பாதிக்க இன்றைய தேசியத் தலைவர் வழியமைக்க வேண்டும். சமீபத்தில் ம.இ.காவின் தலைமைத்துவத் தேர்தல் களத்தில் மைக்கா விவகாரம் குறித்து ம.இ.கா உறுப்பினர்கள் எப்படித்தாக்கிக் கொண்டனர் என்பதும் ஏன் என்பதும் இன்றைய தேசியத் தலைவருக்கு நன்றாகவே தெரியும்”

“ஆகவே, இன்றைய தலைவர் எப்பிங்கம் தமிழ்ப்பள்ளியின் 3 ஏக்கர் நிலத்தை தமிழ்ப்பள்ளியிடம் திரும்ப ஒப்படைத்து, தான் நேர்மையானவர், நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதை நாட்டு மக்களுக்கும் அவர் கட்சி உறுப்பினர்களுக்கும் காட்ட வேண்டும். ஐயப்ப பக்தரான அவர், அதனை செய்வார் என்று சமுதாயம்  பெரிதும் எதிர்ப் பார்க்கிறது. அவர்  அப்படி செய்தால் 2016க்கு பின்புங்கூட பதவியிலிருக்க வாய்ப்புள்ளது.ம.இ.கா அந்த நிலத்தைப்  பள்ளியிடம் திரும்ப ஒப்படைத்தால், அது செலுத்திய நிலப் பிரிமியத்தை மாநில அரசாங்கம் திரும்ப வழங்க, எல்லா ஏற்பாடுகளையும் செய்ய நாங்கள் தயாராகவுள்ளோம்”

“அதே போல் மனிதாபிமான மற்ற ரீதியில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளிலிருந்தும், வேலையிலிருந்தும் விரட்டி 400 தொழிலாளர்களையும், அவர்களின்  பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சூறையாடிய  அரக்கனுக்குத் துணை நின்ற பாவத்தைக் கழுவ வேண்டிய பொறுப்பும் இன்றைய தேசியத் தலைவருக்கு  இருக்கிறது.”

“அந்த 400 முன்னால் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இன்று குடியிருக்க வீடு கூட இல்லாமல் கூடாரத்தில் பரிதவிக்கின்றனர். மாநில  அரசாங்கத்தின்  மூலம் நாங்கள்  அவர்களுக்கு  நிலத்தை வழங்கி விட்டோம். அவர்களுக்கான வீடுகளைக் கட்டப் புத்தரா ஜெயா ஹோல்டிங்ஸை வற்புறுத்த வேண்டிய மிக அவசரப் பணியும் உங்களுடையது என்பதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன்  கேட்டுக் கொள்கிறேன்.”

“போட்டியின்றி நீங்கள் பெற்ற வெற்றி கட்சியில் உங்கள் பலத்தைக் காட்டுகிறது. ஆகவே பள்ளி நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க, நீங்கள் முடிவு எடுத்தால் கட்சியில் எந்த எதிர்ப்பும் இருக்காது, மாறாகப் போற்றப் படுவீர்கள்.

அதே போன்றே டெங்கில் தாமான் பெர்மாத்தா வீட்டு விவகாரம் குறித்துப் பலமாக, பகிரங்கமாகப் பிரதமருக்குக் குரல் கொடுக்கலாம். அப்படிச் செய்தால் எந்த அமைச்சரும்  உங்களை அமைச்சரவையை விட்டு வெளியே போ என்று சொல்ல மாட்டார்கள்.

அவர்களும் உணர்ந்துள்ளனர் டெங்கில் தாமான் பெர்மாத்தா குடியிருப்பாளர்கள் எப்படி அரசாங்கத்தால் ஏமாற்றப் பட்டுள்ளனர் என்பதனை. ஆகவே ஒரு நல்ல தலைவனின் வெற்றி என்பது  அவனுடைய நாட்டின் அல்லது சமூகத்தின் வெற்றியாக இருக்க வேண்டும். குறைந்தது,  இதனையாவது தனது வெற்றிக்கு பரிசாக இந்தியச் சமுதாயத்திற்கு  இன்றைய ம.இ.கா வின் தேசியத் தலைவர் வழங்க வேண்டும்  என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு சேவியர் தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.