சென்னை, செப்.3- ம.தி.மு.க, பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆயுள் தண்டனை அடைந்தோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி, 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருக்கின்றனர்.
வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு கைதி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தால், பரோல் விடுப்பு கிடையாது என்பது மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும்.
நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களை, மேலும் தண்டிப்பதைப் போல் உள்ளது. அவர்களது குடும்பங்களும் சின்னாபின்னமாகின்றன. இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், 14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம்,
இந்திய பாராளுமன்றத்தில் வந்தபோது, நான், எதிர்த்து பேசியவன். நீண்ட நெடிய சிறைவாசத்தில் மனந்திருந்தியவர்கள், எஞ்சிய வாழ்நாளில் சுதந்திரக் காற்றை அனுபவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.
15-ந்தேதி அண்ணாவின் 105-வது பிறந்தநாளாகும். அதையொட்டி, பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்போரை, தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.