செப்டம்பர் 6 – வளரும் இளம் கதாநாயகன் வரிசையில் சேர்ந்து முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில், சத்யராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வெளிவந்திருக்கும் படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”.
தலைப்பு புதுமையாக இருக்கின்றதே என்று திரையரங்கில் போய் உட்பார்ந்தால் அதே பழைய கதை. நகைச்சுவைக் காட்சிகளால் படத்தை நகர்த்தும் அதே பழைய திரைக்கதை பாணி. ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற நகைச்சுவைப் படங்களை எடுத்து பிரபல்யம் அடைந்த இயக்குநர் ராஜேஷ் கைவண்ணத்தில் மலர்கின்ற வசனங்கள், நகைச்சுவையாக எழுதப்பட்டிருந்தாலும், அவை படமாக்கப்பட்ட விதத்தால் கொஞ்சம் கூட காட்சிகள் நம்மைக் கவரவில்லை.
படத்தின் திரைக்கதை
படம் ஆரம்பித்த முதல் வழக்கம் போல் வேலையில்லாத வெட்டி ஆசாமியாக கதாநாயகன் சிவகார்த்திகேயன். அவருக்கு உடந்தையாக நகைச்சுவைக்காக பரோட்டா சூரி. இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகள், அலப்பரைகள்கள்தான் படத்தின் முன்பாதி.
ஆனால், உப்பு சப்பில்லாத நகைச்சுவைத் தோரணங்களை மட்டுமே நம்பியிருக்கின்ற இயக்குநர் பொன்ராம், கதையை நம்பவில்லை. சிவகார்த்திகேயனும், சூரியும் வளவளவென்று பேசிக் கொண்டே இருக்கின்றார்கள்.
இடைவேளை வரை வெறும் நகைச்சுவைக் காட்சிகளை வைத்து நகரும் படம் இடைவேளையில் ஒரு திருப்பத்தைக் கொடுக்கின்றார்கள். ஆனால், இடைவேளைக்குப் பிறகும் கதை மீண்டும் பழைய பாணியில் அதே பாணி நகைச்சுவைக் காட்சிகளாலேயே நகர்வது போரடிக்கின்றது.
ஆரம்பக் காட்சிகளில் மட்டும் சத்யராஜ் தனது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டார் என்றும் அதை காவல் துறையினர் மாறுவேடங்களில் சென்று கிராமத்தில் துப்பறிந்து கண்டுபிடிக்கின்றனர் என்றெல்லாம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை விதைக்கின்றார்கள்.
அந்த மர்மத்தை வைத்தே படத்தை நகர்த்த முயற்சித்திருக்கின்றார்கள். ஆனால், போகப் போக அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படும்போது அது ஒரே புஸ்வாணமாகி படத்தையே கவிழ்த்து விடுகின்றது.
வழக்கம்போல் ஊர்ப் பெரியவரான சத்யராஜ் மகளை ஊரில் வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் காதலிக்கின்றார். வழக்கம்போல் அதற்கு எதிர்ப்பு கிளம்ப அதை எப்படி சமாளிக்கின்றார்கள் என்பதுதான் கதை.
முதலில் பள்ளி ஆசிரியையான பிந்து மாதவிக்கு காதல் கடிதம் கொடுக்க கதாநாயகி மாணவியான ஸ்ரீதிவ்யாவைப் பயன்படுத்திக் கொள்ளும் சிவகார்த்திகேயன் பின்னர் பிந்து மாதவி கல்யாணம் பண்ணிக் கொண்டு செல்ல, கதாநாயகி மேல் காதல் கொள்கின்றார்.
வலுவில்லாத திரைக்கதை, போரடிக்கும் காட்சிகள் என நகர்கின்ற படத்தில் நகைச்சுவையை வரவழைக்க முயன்றிருக்கின்றார்கள். ஆனால், எந்த காட்சியிலும் திரையரங்கில் குபீர் சிரிப்பைக் காண முடியவில்லை.
படம் முழுக்க சிவகார்த்திகேயனும், சூரியும் ஒரே பாணியில், நாடகத்தனமாக பேசிக் கொண்டே இருப்பது கொட்டாவியை வரவழைக்கின்றது.
இடைவேளைக்குப் பிறகு படத்தின் ஓட்டம் விறுவிறுப்பாக மாறும் என எதிர்பார்த்தால், மீண்டும் அதே பாணியில் சிவகார்த்திகேயனும், சூரியும் தங்களின் வளவள பேச்சை தொடர்கின்றார்கள்.
அவர்கள் ஏன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற பெயரில் ஊரில் சங்கம் நடத்துகின்றார்கள் என்பதற்கும் காரணம் கூறப்படவில்லை. படத்தின் தலைப்பாகவே வைக்கப்பட்டிருக்கும் இந்த சங்கத்திற்கும் திரைக்கதைக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.
அதைவிடக் கொடுமையாக, சூரி, சிவகார்த்திகேயனிடமிருந்து பிரிந்து சென்று, “எப்போதும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற பெயரில் போட்டி சங்கம் நடத்துகின்றார். பின்னர் அதையும் மூடிவிட்டு கதாநாயகனிடம் வந்து மீண்டும் ஒட்டிக்கொள்கின்றார்.
ஆனால், இந்த சம்பவங்கள் எல்லாம் ஏன் படத்தில் சேர்த்திருக்கின்றார்கள் என்பதற்கும் தகுந்த காரணமில்லை.
கிராமத்தில் திருவிழாவில் ரெகார்ட் டான்ஸ் எனப்படும் குத்து நடனம் ஆடுவதற்கு நடனப் பெண் வருவதும் அவரைப் பார்த்து பல்போன ஊர்ப் பெரிசுகள் ஜொள் விடும் காட்சிகளும் இதற்கு முன் எத்தனையோ படங்களில் பார்த்தாகிவிட்டது.
இயக்குநர் எங்கேயும் வித்தியாசமாக யோசித்துவிடக்கூடாது என மெனக்கெட்டிருப்பார் போலும்!
ஆனால், பசுமாடு கிணற்றுக்குள் விழுவதும் அதைக் காப்பாற்ற சிவ கார்த்திகேயன் போராடுவது மட்டும் சற்றே வித்தியாசமான காட்சியமைப்பு.
நடிகர்கள், நடிகைகள்…
சத்யராஜ், உடல் மொழியாலும், ஒப்பனையாலும் கவர்கின்றார். ஆனால், படத்தின் இறுதிவரை அவர் வில்லனா, அல்லது அவர் கதாபாத்திரம் நகைச்சுவைக்கென படைக்கப்பட்டதா எனத் தெரியாமல் ரசிகர்கள் குழம்புவது நிச்சயம்.
பல இடங்களில் அவர் கொடூரமானவர், கெட்டவர் எனக் காட்டப்படுகின்றார். அதற்குத் தகுந்தாற்போல் அவரும் முகத்தை உம்மென்று சீரியசாக வைத்துக் கொண்டே காட்சிகளில் தோன்றுகின்றார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு காமெடியனாகக் காட்டப்படுகின்றார்.
படம் முழுக்க முக்கிய கதாபாத்திரமாக வரும் அவரது கதாபாத்திரச் சிதைவு படத்தின் பெரிய பலவீனம்.
கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருப்பவர் ஸ்ரீதிவ்யா. ஆனால் முகத்தில் சரியான பாவங்கள் இல்லை. பள்ளி உடையில் மிகவும் சிறிய பெண்ணாக தோன்றுகின்றார். அதனாலேயே என்னவோ, படத்தின் பிற்பாதியில் அவர் சேலை கட்டி வருவதாகவும், அதைப் பார்த்து கதாநாயகன் காதலில் விழுவதாகவும் காட்சி அமைத்திருக்கின்றார்கள். முதல் படம் என்பதால் ஸ்ரீதிவ்யாவை மன்னித்து விடலாம்.
படத்தின் ஒரே ஆறுதல் பிந்து மாதவி. அழகான கண்களுடன் சில காட்சிகளில் வந்தாலும் சிவகார்த்திகேயனை மட்டுமல்லாது நம்மையும் கவர்கின்றார். ஆனால், சில காட்சிகளோடு அவர் திருமணம் செய்து கொண்டு போய்விடுவதோடு, படமும் தொய்வடைந்து விடுகின்றது.
இசையும் பாடல்களும்..
டி.இமான் இசையில் பாடல்கள் கவர்கின்றன. இருப்பினும் இடைவேளைக்குப் பிறகு வழக்கம்போல் வரும் காதல் பாடலும், தற்போது தமிழ்ப் படங்களின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட மதுக்கடை குத்து பாடலும் படத்தின் ஓட்டத்திற்கு தடை போடுகின்றன.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடங்கும் பாடலை முதல் முறையாக சிவகார்த்திகேயன் பாடியிருக்கின்றார்.
ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் கவனித்திருக்கின்றார். ஒளிப்பதிவுக்கு அதிக வேலையில்லை என்றாலும், அவர் பங்கை சிறப்பாகவே ஆற்றியிருக்கின்றார் என்றுதான் கூறவேண்டும்.
படம் முடிந்தவுடன் காட்டப்படும், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளின் கோர்வை மட்டும் சிறப்பாக இருக்கின்றது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்க்கச் சென்றால் நிச்சயம் வருத்தப்படுவீர்கள்!
-இரா.முத்தரசன்